ADDED : டிச 27, 2024 11:23 PM
பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரின் பேடரஹள்ளியில் வசித்தவர் நரசிம்மமூர்த்தி, 59. இவர், ஜடகனஹள்ளியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 2025 ஜனவரி 15ல் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
துங்கா நகரில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய். இந்த நிலத்தை காங்கிரஸ் பிரமுகர் சதீஷ் என்பவர் வாங்குவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, 'அக்ரிமென்ட்' செய்து கொண்டார்.
மீதி பணத்தை கொடுக்காமல், நிலத்தை சதீஷ் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிலத்துக்கான பணத்தை கேட்பதற்காக சதீஷின் வீட்டுக்கு நரசிம்ம மூர்த்தி, சென்றார். ஆனால், அவரோ பணத்தை கொடுக்காமல் மிரட்டியுள்ளார்.
நிலம் பறிபோனதால் விரக்தி அடைந்த நரசிம்மமூர்த்தி, நேற்று அதிகாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், சதீஷின் மோசடி பற்றி விவரித்துள்ளார். பேடரஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

