ADDED : அக் 05, 2024 01:26 AM
அமேதி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி பகுதியில் உள்ள சுதாமாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவரது மகன் சுனில், 35, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அமேதி தொகுதியின் பன்ஹானா பகுதியில் உள்ள பள்ளிக்கு இவர் சமீபத்தில் மாற்றப்பட்டார்.
இதையடுத்து, அங்குள்ள சிவ்ரத்தன்கஞ்ச் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி பூனம், 32, மற்றும் 6, ஒன்றரை வயது நிரம்பிய இரு மகள்களுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்தனர்.
அப்போது, வீட்டின் தோட்டத்தில் சுனில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் நால்வரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ரேபரேலியில் வசித்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சந்தன் வர்மா என்பவர் மீது சுனிலின் மனைவி பூனம் போலீசில் புகாரளித்திருந்தார்.
அந்த புகாரில், 'சந்தன் வர்மா என்பவர் எனக்கு தொடர்ந்து தொல்லை தந்து வருகிறார். எனக்கோ அல்லது என் குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால், அதற்கு அவர்தான் முழு பொறுப்பு' என தெரிவித்திருந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'ஆசிரியரின் மனைவி பூனம், சந்தன் வர்மா என்பவர் மீது ரேபரேலியில் புகார் அளித்துள்ளார். அதற்கும், நடந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பது போல் தெரியவில்லை' என்றனர்.