ஆசிரியர்களை தாக்கிய வழக்கு: மும்பை மேயரை விடுவிக்க மறுப்பு
ஆசிரியர்களை தாக்கிய வழக்கு: மும்பை மேயரை விடுவிக்க மறுப்பு
ADDED : மார் 19, 2026 01:23 AM

மும்பை: மும்பை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் இருவரை, கடந்த 2016ல் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, மும்பை மேயர் ரிது தாவ்டே தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட வகோலா பகுதியில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் சாஹின் கான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரை, மாநகராட்சி நிர்வாகம் கடந்த, 2016 ஜூன் மாதம் திடீரென இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. நோய் பாதித்த தன்னை இடமாற்றம் செய்ததை அவர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக நியாயம் கேட்க அந்த பள்ளிக்கு ஆறு நபர்களுடன் வந்த அப்போதைய பா.ஜ., கவுன்சிலரும், தற்போதைய மும்பை மாநகராட்சி மேயருமான ரிது தாவ்டே, பள்ளி தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆசிரியர்கள் இருவரை அவர்கள் தாக்கினர்.
இது தொடர்பான வழக்கு மும்பை கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, மேயர் ரிது தாவ்டே அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி மனத்கா, ''பாதிக்கப்பட்டவர்கள் தன்னை தாவ்டே தாக்கினார் என வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுவே உங்கள் மீது குற்றச்சாட்டு பதிய போதுமான ஆதாரம். எனவே மேயர் ரிது தாவ்டே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்,'' என உத்தரவிட்டார்.
