ADDED : ஏப் 23, 2025 03:46 AM

கொல்கட்டா : மேற்கு வங்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் நியமனங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, தங்களுக்கு உரிய நீதி வழங்கும்படி பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், மாநில அரசின் பணியாளர் தேர்வாணையம் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரவாதம்
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 2016ல் மாநில அரசின் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு பள்ளிகளில், 26,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க அரசின் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டது. இதன் காரணமாக, அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேற்கு வங்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என மாநில கல்வி அமைச்சர் பிராத்யா பாசு உறுதியளித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் தரப்படும் எனவும், மேற்கு வங்க அரசு உறுதியளித்தது.
நடவடிக்கை இல்லை
எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், சால்ட் லேக் பகுதியில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகம் முன், நேற்று முன்தினம் முதல் தர்ணாவில் ஈடுபட்டுஉள்ளனர்.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், பல ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.