ADDED : மார் 18, 2025 05:00 AM

ஹூப்பள்ளி: ஜெயின் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தாமதமாவதால், ஹூப்பள்ளியின், வரூர் நவக்கிரக தீர்த்த தலத்தின் ஜெயின் முனிவர் குணதரநந்தி சுவாமி கண்ணீர் வடித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜெயின் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது உட்பட, ஏழு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தில், மாநில அரசு உறுதி அளித்தது. இதுவரை மூன்று கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்றியது. இன்னும் நான்கு கோரிக்கைகள் பாக்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் ஜமீர் அகமது கானை சந்தித்து, ஜெயின் மேம்பாட்டு ஆணையம் அமைக்கும்படி வேண்டுகோள் விடுத்தோம். அதுபோன்று அனைத்து அமைச்சர்களையும் சந்திப்போம். எங்கள் கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்தினால், ஜூன் 8ம் தேதி, ஐனாபுராவில் மாநாடு நடத்துவோம்.
அப்போதும் பணியாவிட்டால், விதான்சவுதா எதிரே, உணவு, நீரை புறக்கணித்து சத்தியாகிரக போராட்டத்தை துவக்குவேன். முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஜெயின் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தி உள்ளார். விரைவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அவர் கண்ணீர் வடித்தார். இதனால் பரபரப்பு நிலவியது.