ADDED : ஜன 08, 2024 10:57 PM
ஷிவமொகா: குரங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட 18 வயது இளம்பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். காய்ச்சல் பரவுவதால் கிராமத்தினர் பீதியடைந்துள்ளனர்.
ஷிவமொகா, ஹொசநகரின், அரமனேகொப்பா கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம்பெண், ஒரு வாரமாக காய்ச்சலில் அவதிப்பட்டார்.
திடீரென காய்ச்சல் அதிகரித்ததால், ஷிவமொகாவின், மெக்கான் மருத்துவமனையில் சேர்த்தனர். மாவட்டமான ஷிவமொகாவில், குரங்கு காய்ச்சல் தென்பட்டதால், இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால், மெக்கான் மருத்துவமனையில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், உடல் உறுப்புகள் செயலிழந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
மாவட்ட சுகாதார அதிகாரி ராஜேஷ் சுரகிஹள்ளி கூறியதாவது:
குரங்கு காய்ச்சல் ஏற்பட்ட இளம்பெண், ரத்த சோகையால் அவதிப்பட்டார். இதனால், சிகிச்சை பலனளிக்கவில்லை. ஒரு மாதமாக மூவருக்கு குரங்கு காய்ச்சல் தென்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
அரமனேகொப்பா பகுதியில், 2014ல் குரங்கு காய்ச்சல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் தென்பட்டுள்ளது. எனவே, டாக்டர்கள் குழுவை, கிராமத்துக்கு அனுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.