ADDED : செப் 28, 2024 07:32 PM
காஜியாபாத்:முன்னாள் காதலனைக் கொலை செய்த இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ்பூரைச் சேர்ந்தவர் ராணி,20. அதே ஊரைச் சேர்ந்த நிதிஷ் சர்மா,21, என்பவரைக் காதலித்தார். சில மாதங்களுக்கு முன் நிதிஷை நிராகரித்தார். ஆனால், நிதிஷ் தொடர்ந்து ராணியை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார்.
இதற்கிடையில், ராஜு தபா,22, என்பவருடன் ராணிக்கு காதல் ஏற்பட்டது. இந்நிலையில், தங்கள் காதலுக்கு நிதிஷ் சர்மா இடைஞ்சலாக இருப்பதாக நினைத்த ராணியும், ராஜுவும் சேர்ந்து, நிதிஷ் ஷர்மாவை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
நிதிஷின் தந்தை கிஷோர் ஷர்மா போலீசில் கொடுத்த புகாரில், ராணி மற்றும் அவரது காதலன் ராஜூ தபா ஆகியோர் தன் மகனை கொலை செய்து விட்டதாக கூறியிருந்தார்.
விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன் தினம் இரவு நிதிஷ் சர்மா உடலை மீட்டனர். மேலும், ராணி மற்றும் ராஜூ தபா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீசாரிடம் ராணி, “நிதிஷின் காதலை நான் நிராகரித்த பிறகும் என்னைப் பின்தொடர்ந்தார். சாலையில் நடந்து செல்லும்போது குறுக்கிட்டு கேள்விகளாக கேட்டு எரிச்சலூட்டினார். நான் ராஜூ தபாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன். அதனால்தான் இருவரும் சேர்ந்து நிதிஷ் சர்மாவை கொலை செய்தோம்,”என, வாக்குமூலம் அளித்துள்ளார். இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.