ADDED : மார் 26, 2025 08:52 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, காரை மோதி தப்பி சென்ற, போதை மாத்திரை கடத்தும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், காவச்சேரி பத்தனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் உவைஸ், 46. இவர், வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில், கூடுதல் எஸ்.ஐ., ஆக பணி புரிகிறார்.
இந்நிலையில், அவர் தலைமையிலான போலீசார், 24ம் தேதி இரவு, பாலக்காடு- - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில், செம்மணாம்குன்னு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த காரில் இருந்த நபரை, காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால், திடீரென காரை அதிவேகமாக இயக்கி, கூடுதல் எஸ்.ஐ., மீது மோதி சென்றார். இதில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. சக போலீசார், அவரை மீட்டு ஆலத்தூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காரின் பதிவு எண்ணை கொண்டு, விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை கோட்டயம் கறுகச்சால் என்ற இடத்தில், அந்த காரை பிடித்தனர். விசாரணையில், காரை ஓட்டியவர், பாலக்காடு மாவட்டம், கண்ணம்பிரா பகுதியைச் சேர்ந்த பிரதுல், 20, என்பதும்; அவரிடம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து, அவர் மீது கொலை முயற்சி, போதை மாத்திரை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதுல், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.