காதலித்து திருமணம் செய்ததால் வாலிபர் பெற்றோர் மீது தாக்குதல்
காதலித்து திருமணம் செய்ததால் வாலிபர் பெற்றோர் மீது தாக்குதல்
ADDED : ஜன 01, 2024 06:40 AM
தாவணகெரே: காதலித்து திருமணம் செய்ததால், வாலிபரின் பெற்றோரை, பெண்ணின் தாய்மாமாக்கள் மனம் போனபடி தாக்கினர்.
சில நாட்களுக்கு முன்பு தான், பெலகாவியில் காதலியுடன் ஊரை விட்டு ஓடியதால், வாலிபரின் தாயை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக இழுத்து சென்று, கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போன்ற சம்பவம் தாவணகெரேவில் நடந்துள்ளது.
தாவணகெரே, ஹரிஹராவின் கமலாபுரா கிராமத்தை சேர்ந்த சித்தார்த், 27, ஸ்ருஷ்டி, 22, பரஸ்பரம் காதலித்தனர். இவர்கள் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், ஸ்ருஷ்டியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 20 நாட்களுக்கு முன், காதலர்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். சட்டப்படி திருமணத்தை பதிவும் செய்தனர்.
இதையறிந்த ஸ்ருஷ்டியின் தாய்மாமாக்கள், நேற்று முன் தினம் மாலை, சித்தார்த் வீட்டுக்கு சென்றனர். அவரது தந்தை ஆருன்டி பசப்பாவின் உடையை கிழித்து, மனம் போனபடி தாக்கினர். தாயார் மல்லம்மாவையும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஆருன்டி பசப்பா, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இது குறித்து, மலேபென்னுார் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.