இன்சூரன்ஸ் பணத்துக்காக வாலிபர் கொலை: உறவினர் உட்பட நால்வர் கைது
இன்சூரன்ஸ் பணத்துக்காக வாலிபர் கொலை: உறவினர் உட்பட நால்வர் கைது
ADDED : நவ 07, 2024 12:52 AM
தாவணகெரே: இன்சூரன்ஸ் பணத்துக்காக வாலிபரை கொலை செய்த உறவினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தாவணகெரேவின், இமாம் நகரில் வசித்தவர் துக்கேஷ், 32. தாய், தந்தையை இழந்த இவர், தன் தம்பி கோபி, 28, உடன் பாட்டி வீட்டில் வசித்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களின் உறவினர் கணேஷ், 24. இவர் மூலமாக, கோபி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். கடனை அடைக்காமல் தலைமறைவாக திரிந்தார்.
இந்த விஷயத்தை துக்கேஷிடம் கூறிய கணேஷ், பணத்தை திருப்பி தரும்படி நச்சரித்தார். பழக்கடை நடத்தி வரும் துக்கேஷால், அவ்வளவு பணத்தை தர முடியவில்லை. கோபியிடம் இருந்து பணம் வராது என்பதை தெரிந்து கொண்ட கணேஷ், வேறொரு சதி திட்டம் தீட்டினார்.
துக்கேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. 'அவர் விரைவில் இறந்து விடுவார். எனவே அவர் பெயரில் இன்சூரன்ஸ் செய்தால், பணம் கிடைக்கும்' என, நினைத்தார்.
ஓராண்டுக்கு முன், தாவணகெரேவின் தனியார் வங்கியில் கணேஷ், 2 லட்சம் ரூபாய் பிரிமீயம் கட்டி துக்கேஷுக்கு இன்சூரன்ஸ் செய்தார். நாமினியாக தன் பெயரை போட்டுக் கொண்டார்.
ஓராண்டு கடந்தும், துக்கேஷ் இறக்கவில்லை. வரும் 2025 ஜனவரியில் இன்சூரன்சை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கா விட்டால், 2 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும். துக்கேஷை கொலை செய்தால், 40 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என, கணேஷ் நினைத்தார்.
எனவே தன் கூட்டாளிகள் அனில், 18, சிவகுமார், 25, மாருதி, 24, ஆகியோருடன் சேர்ந்து, நவம்பர் 4ம் தேதி, துக்கேஷை கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை அவரது வீட்டு முன்பாக வீசினர். மது அருந்தி உயிரிழந்திருக்கலாம் என்பதற்காக இப்படி செய்தனர்.
இது தொடர்பாக, பல கோணங்களில் விசாரணை நடத்திய ஆஜாத் நகர் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், கணேஷிடம் விசாரணை நடத்தினர். அவரும் இன்சூரன்ஸ் பணத்துக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர் உட்பட, நால்வரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.