துணை முதல்வர் வேட்பாளர் பற்றிய அசாதுதின் ஓவைசி கேள்வி; பதிலை தவிர்த்த தேஜஸ்வி யாதவ்
துணை முதல்வர் வேட்பாளர் பற்றிய அசாதுதின் ஓவைசி கேள்வி; பதிலை தவிர்த்த தேஜஸ்வி யாதவ்
ADDED : அக் 29, 2025 11:55 AM

பாட்னா: பீஹாரில் துணை முதல்வர் வேட்பாளராக முஸ்லீம் ஒருவரை ஏன் அறிவிக்கவில்லை என்று இண்டி கூட்டணியை விமர்சித்த அசாதுதின் ஓவைசியின் கேள்விக்கு அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பதிலளிக்காமல் தவிர்த்தார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டு உள்ளார். இண்டி கூட்டணியின் தேர்தல் அறிக்கையும் நேற்று வெளியிடப்பட்டது. அதில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை என கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றது.
இண்டி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை பாஜ உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் விமர்சித்து இருந்தன. அதே நேரத்தில், அசாதுதின் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சி பீஹார் தேர்தலில் 32 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுகிறது.
இதையொட்டி கோபால்கஞ்ச் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அசாதுதின் ஓவைசி, இண்டி கூட்டணி வென்றால் 3 சதவீதம் மக்கள் தொகை கொண்ட நிஷாத் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் பீஹாரில் 17 சதவீதம் இருக்கும் முஸ்லீம் மக்கள் தொகையில் ஏன் ஒரு முஸ்லீம் முதல்வராக கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
இந் நிலையில், பாட்னாவில் நிருபர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவிடம், அசாதுதின் ஓவைசியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு அவர் பதில் தர மறுத்தார். தொடர்ந்து அந்த விஷயத்தை விடுங்கள், நான் அதை பற்றி என்ன சொல்ல என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய தேஜஸ்வி, தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றுவோம். பழைய ஒய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்து இருக்கிறோம். அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

