நிதீஷ் குமாருடன் எதிர்கால கூட்டணி யார்? பா.ஜ., Vs ஆர்.ஜே.டி., தொடரும் மோதல்
நிதீஷ் குமாருடன் எதிர்கால கூட்டணி யார்? பா.ஜ., Vs ஆர்.ஜே.டி., தொடரும் மோதல்
ADDED : செப் 10, 2024 07:33 AM

புதுடில்லி: 'பீஹார் முதல்வர் நிதீஷ்குமாருடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை' என்று அடித்து சொல்கிறார் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ். 'அவருக்கு கிடைக்காத திராட்சை புளிக்கிறது' என்று கிண்டல் செய்கின்றனர், ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர்.
பீஹார் மற்றும் தேசிய அரசியலில் முக்கிய தலைவரான முதல்வர் நிதீஷ் குமார், மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். 20 ஆண்டுகள் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அவர், இடையில் நான்கு ஆண்டுகள் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றார். கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு வந்துவிட்டார்.
தேஜஸ்வி சொல்வது என்ன?
இந்நிலையில், நிருபர்கள் சநத்திப்பில், ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பீஹார் முதல்வருடன் எந்த கூட்டணியையும் வைத்திருக்க மாட்டோம். அவரது கட்சியான ஜனதா தளம் பலமுறை எங்கள் உதவியை நாடியது. அவர்கள் (ஜே.டி.யு.,) துன்பத்தில் இருக்கும்போது எங்கள் கால்களைப் பிடித்துக் கொள்கின்றனர். நாங்கள் அவர்களுக்கு இரண்டு முறை உதவி செய்துள்ளோம், ஆனால் இனியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது அர்த்தமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
நிதீஷ் கட்சி நிராகரிப்பு
இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தேசிய செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது: தேஜஸ்வி யாதவ் சொல்வது பொய். தேஜஸ்விக்கு திராட்சை புளிப்பானது போல் உள்ளது. இப்போது கூட்டணிக்காக அவர்களை அணுகுவது யார்? தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். லாலு பிரசாத் தான் நிதீஷ்குமாரை கூட்டணிக்காக அணுகினார். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., ரிப்ளே!
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த காலங்களில் நிதீஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால், தேஜஸ்வி யாதவ் விரக்தியில் உள்ளார். அவர் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தது என் தவறு. இந்த தவறை இரண்டு முறை செய்தேன். ஆனால் மீண்டும் செய்ய மாட்டேன் என நிதீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால் நிதீஷ் குமார் கூட்டணி மாற வாய்ப்பில்லை என்று சொல்கின்றனர் விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள்.