ADDED : ஜூலை 03, 2025 01:07 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில், விபத்துக்குள்ளான ரசாயன தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்கு, பழைய இயந்திரங்கள் பயன்படுத்தியதுடன், முறையான தீ தடுப்பு சாதனங்கள் பயன்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் 30ம் தேதி பணியில் இருந்தபோது, அங்கிருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த விபத்தில் சிக்கி, 38 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து மாநில அரசு சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, உயிரிழந்த தொழிலாளர்களில் ஒருவரான ராஜனாலா வெங்கட் ஜெகன் மோகன்வாஸ் என்பவரின் மகன் யஷ்வந்த் அளித்த புகாரின்படி, ஷிகாச்சி நிறுவனம் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இப்புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
என் தந்தை, ஷிகாச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் பல, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பெரும் விபத்து நேரிடும் எனவும் குடும் பத்தினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து, அதே இயந்திரத்தை பயன்படுத்தியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே, அலட்சியமாக செயல்பட்ட அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அத்தொழிற்சாலையில், முறையான தீ தடுப்பு சாதனங்கள் அமைக்கவில்லை எனவும், தீயணைப்புத்துறையிடம் இருந்து பாதுகாப்பு சான்றிதழும் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் அந்நிறுவனத்தின் துணை தலைவர் சிதம்பரநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொழிற்சாலை விபத்தில், இறந்த எங்கள் நிறுவன பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். தொழிற்சாலையில் உள்ள உலைகள் எதுவும் வெடிக்கவில்லை. எனவே, விபத்திற்கான காரணம் பற்றி கண்டறிய அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்றார்.