வினாடி நேரத்தில் நிகழ்ந்த விபத்து! ரூட் மாறிய சென்னை ரயில்கள்
வினாடி நேரத்தில் நிகழ்ந்த விபத்து! ரூட் மாறிய சென்னை ரயில்கள்
ADDED : நவ 13, 2024 08:20 AM

செகந்திராபாத்: தெலுங்கானாவில் சரக்கு ரயில் தடம்புரண்டுj விபத்துக்கு உள்ளானதால் சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பெல்லாரி- உத்தரப்பிரதேசத்துக்கு இரும்பு லோடு ஏற்றியபடி சரக்கு ரயில் சென்றுள்ளது. பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம்-ராகவபுரம் இடையே வந்து கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் ரயிலில் இருந்த 44 பெட்டிகளில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது.
இதன்காரணமாக வட மாநிலங்களில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போல சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது.
நாக்பூர்-செகந்திராபாத் இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்(20101, 20102) இரு மார்க்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஜெய்ப்பூர்-மைசூரு, பிலாஸ்பூர்-நெல்லை, தனபூர்-பெங்களூரு, நிஜாமூதின்-ஹைதராபாத், செகந்திராபாத்-ஹிஸ்ஸார், செகந்திராபாத்-தர்பங்கா, செகந்திராபாத்-கோரக்பூர் , ஜோத்பூர்-சென்னை, சாப்ரா-சென்னை, பாட்னா-செகந்திராபாத் உள்ளிட்ட பல ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 17 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுபாதையில் திருப்பி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.