சி.பி.ஐ., விசாரிக்க தெலுங்கானா அரசு பரிந்துரை: முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிக்கல்
சி.பி.ஐ., விசாரிக்க தெலுங்கானா அரசு பரிந்துரை: முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிக்கல்
ADDED : செப் 02, 2025 02:57 AM

தெலுங்கானாவில், காலேஸ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரைத்தார். எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கலக்கமடைந்துள்ளார்.
தெலுங்கானாவில், 2014 - 2023 டிச., வரை தொடர்ந்து இரு முறை, பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், முதல்வராக பதவி வகித்தார்.
விசாரணை கமிஷன்
இவரது ஆட்சியில், ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா என்ற இடத்தில், காலேஸ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், 1.05 லட்சம் கோடி ரூபாயில் பிரமாண்ட அணை கட்டப்பட்டது.
சந்திரசேகர ராவ் ஆட்சி முடியும் நேரத்தில், அதாவது, 2023 அக்டோபரில் அணையின் ஐந்து துாண்கள் சரிந்து கீழே இறங்கின. மேலும் நீரேற்றும் கட்டுமானமும் இடிந்து விழுந்து நீரில் மூழ்கியது. அணை கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதைத் தொடர்ந்து, 2023 நவம்பரில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்., அபார வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார்.
காலேஸ்வரம் அணை முறைகேடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சி.கோஷ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 15 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்திய கமிஷன், 665 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை, ஜூலை 31ல் தெலுங்கானா அரசிடம் சமர்ப்பித்தது.
சட்டசபையில் தாக்கல்
அதில், 'அணை கட்டுமானம் இடிந்து விழுந்ததற்கு தவறான வடிவமைப்பே காரணம். நிபுணர்கள் எச்சரித்தும், அமைச்சரவையிடம் கூட ஆலோசிக்காமல் அணை கட்டும் திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்தார். அவரது இந்த முடிவுக்கு நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவும் உடந்தை' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விசாரணை கமிஷன் அறிக்கை தொடர்பாக, கடந்த 4ல், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 31ல் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்துக்கு சென்று கமிஷனின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதை தடுக்க பாரத் ராஷ்டிர சமிதி திட்டமிட்டிருந்தது. ஆனால், வார இறுதி நாட்களில் சட்டசபையை கூட்டி கமிஷன் அறிக்கையை காங்., அரசு சாதுரியமாக தாக்கல் செய்து விட்டது.
இந்நிலையில், காலேஸ்வரம் அணை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரைத்து உள்ளார்.
கலக்கம்
இதையேற்று, விரைவில் சி.பி.ஐ., விசாரணையை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கலக்கமடைந்துள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் அரசு நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி, சந்திரசேகர ராவ், ஹரிஷ் ராவ் தரப்பில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -