ADDED : செப் 27, 2011 01:15 AM

ஐதராபாத் : தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர், தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கக் கோரி, தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தெலுங்கானா பகுதிகளில் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவின் அமைப்பாளர் கோதண்டராம் கூறியதாவது: ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை (இன்று) பேரணி நடத்த உள்ளனர். ஐதராபாத்தில் இம்மாதம் 28ம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். தெலுங்கானா பகுதிகளில் முதல்வர் கிரண்குமார் அரசு, மின் சப்ளையை துண்டித்து வருகிறது. இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளின் வீடுகளை முற்றுகையிடுமாறு தெலுங்கானா போராட்டக்காரர்களை கேட்டுள்ளோம்.
வரும் 30ம் தேதி, ஐதராபாத்தில் 'பந்த்' நடத்த உள்ளோம். அடுத்த மாதம் 1ம் தேதி, எரிப்பு போராட்டம் நடத்துகிறோம். அடுத்த மாதம் 9, 10, 11ம் தேதிகளில் ரயில் மறியல் நடைபெற உள்ளது. தெலுங்கானா பகுதிகளைச் சாராதவர்களை கொண்டு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்கள் தெலுங்கானா பகுதிகளில் தொடர்ந்து இயங்கினால், அதற்கான பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள், தனி தெலுங்கானாவுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு கோதண்டராம் கூறினார்.