ADDED : ஆக 05, 2011 12:36 AM
ஐதராபாத் : தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, அந்த பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு, இந்த விஷயத்தை பொருட்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த விஷயத்திலும், தெலுங்கானா ஆதரவாளர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, அரசு ஊழியர்களும், நேற்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் நேற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். ஐதராபாத், இந்திரா பூங்காவில் நடந்த போராட்டத்தில், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் பங்கேற்றன. இந்த போராட்டத்தின் போது, அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, ஆந்திர அரசு 'எஸ்மா' சட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறுகையில்,'ஒரு பக்கம், பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி, எங்களுக்கு ஆந்திர அரசு அழைப்பு விடுக்கிறது. மறுபக்கம், 'எஸ்மா' சட்டத்தை கொண்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது'என்றனர்.