மாநகராட்சிக்கு ரூ.120 கோடி வரி பாக்கி டெலிகாம் நிறுவனங்கள் 'டிமிக்கி'
மாநகராட்சிக்கு ரூ.120 கோடி வரி பாக்கி டெலிகாம் நிறுவனங்கள் 'டிமிக்கி'
ADDED : டிச 01, 2024 03:56 AM
பெங்களூரு: பெங்களூரில் மொபைல் டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இவற்றுக்கு சரியாக வரி செலுத்துவதில், டெலிகாம் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாநகராட்சிக்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரி பாக்கிவைத்துள்ளன.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் நிலத்தில் கட்டடங்களின் மீது மொபைல் டவர்கள் பொருத்தும் டெலிகாம் நிறுவனங்களிடம், சொத்து வரி வசூலிக்க 2014 - 15ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால் டெலிகாம் நிறுவனங்கள், இதுவரை வரி செலுத்தாமல் இழுத்தடிக்கின்றன.
நகரில் 10,000 மொபைல் டவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை பொருத்திய டெலிகாம் நிறுவனங்கள், கட்டணம் செலுத்தவில்லை; சொத்து வரியும் செலுத்துவதில்லை. இதனால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 100 முதல் 120 கோடி ரூபாய் வரை, பாக்கி வைத்துள்ளன.
சொத்து வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட ஓ.டி.எஸ்., எனும் ஒன் டைம் செட்டில்மென்ட் சலுகை, டெலிகாம் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டது. அபராதம், வட்டி இல்லாமல் வரி செலுத்தியிருக்கலாம். ஆனால் ஓ.டி.எஸ்., திட்டத்தின் சலுகை, நவம்பர் 30ம் தேதியுடன் முடிந்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களிடம் வரியை வசூலிப்பதே, மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
மாநகராட்சி எல்லையில் 10,000க்கும் மேற்பட்ட மொபைல் டவர்கள் உள்ளன. 2018ல் அன்றைய வரி மற்றும் நிலைக்குழு தலைவர், டெலிகாம் நிறுவனங்களுடன் கூட்டம் நடத்தி, மொபைல் டவர்களை பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.
இதன்படி ஆறு நிறுவனங்கள், 6,766 மொபைல் டவர்களை பதிவு செய்தன. மற்ற நிறுவனங்கள் பதிவு செய்யவில்லை.
மொபைல் டவர்களை கட்டுப்படுத்த, நகர மேம்பாட்டுத் துறை, 2016ல் வரைவு கொள்கை வெளியிட்டது. ஒரு டவர் பொருத்த 50,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, இந்த தொகையை உள்ளாட்சிகளிடம் செலுத்த வேண்டும் என, வரைவு கொள்கையில் கூறப்பட்டிருந்தது.
டெலிகாம் நிறுவனங்களிடம் கட்டாயம் 50,000 ரூபாய் கட்டணம் வசூலிக்க, 2017ல் மாநகராட்சியில் கவுன்சில் கூட்டத்தில் முடிவானது. ஆனால் ஏழு ஆண்டுகளாகியும், டெலிகாம் நிறுவனங்கள் டவர்கள் பொருத்த, கட்டணம் செலுத்தவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.