ADDED : மார் 12, 2024 03:19 AM
கே.ஆர்.புரம்: பெங்களூரின் கே.ஆர்., புரத்தில் உள்ள மைதானத்தில், நேற்று முன் தினம் இளைஞர்கள் சிலர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், பிரபாஸ் ரசிகர்கள்.
அப்போது, ஏதோ காரணத்தால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் அடித்துக் கொண்டனர். 'ஜெய் அல்லு அர்ஜுன்' என கூறு; உன்னை விட்டு விடுகிறோம்' என, கட்டாயப்படுத்தினர்.
இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கொதிப்படைந்தனர். அங்கு பதற்ற சூழ்நிலை உருவானது. அங்கு வந்த, கே.ஆர்.புரம் போலீசார், இளைஞர்களை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
ரசிகர்கள் அடித்துக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. ரசிகர்களின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.
'நடிகர்களை முன் வைத்து, ரசிகர்கள் மோதிக்கொள்வது சரியல்ல. இந்த விஷயத்தில் நடிகர்கள், தங்கள் ரசிகர்களுக்கு புத்திமதி கூற வேண்டும்' என, அறிவுறுத்தினர்.
