உ.பி.,யில் 44 ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோவில் திறப்பு
உ.பி.,யில் 44 ஆண்டுகளாக மூடிக்கிடந்த கோவில் திறப்பு
ADDED : ஜன 02, 2025 02:42 AM
மொரதாபாத்,  உத்தர பிரதேசத்தின் மொரதாபாத் பகுதியில் கலவரத்தால், 44 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோவில், மீண்டும் திறக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில் மொரதாபாத் நகரில் உள்ள தவுலதாபாக் பகுதியில், பிரசித்தி பெற்ற கவுரி சங்கர் கோவில் உள்ளது.
கடந்த, 1980ல் இங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால், இந்த கோவிலின் பூசாரி கொல்லப்பட்டார்.
பதற்றமான சூழல் நிலவியதால் கோவில் மூடப்பட்டது. இந்நிலை யில் சமீப காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மூடப்பட்டுஉள்ள கோவில்கள் திறக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தவுலதாபாக்கில் உள்ள இந்த கோவிலை, அரசு உத்தரவின்படி, கடந்த 30ம் தேதி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்த குழுவினர் திறந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் கூறியதாவது:
கோவிலை திறக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து கோவில் திறக்கப்பட்டது.
எனினும் மூடிக்கிடந்ததால் அங்கிருந்த சில சிலைகள் மாயமாகிஉள்ளன. மேலும் சில சிலைகள் சேதமடைந்துஉள்ளன. தற்போது அந்த கோவிலில் மறுசீரமைப்பு பணி நடக்கிறது. இதையடுத்து வழக்கம் போல் சாமி தரிசனத்துக்கு கோவில் தயாராகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

