ADDED : ஆக 31, 2025 12:32 AM
புதுடில்லி: டில்லியில் உள்ள கல்காஜி கோவிலில் பிரசாதம் வழங்க மறுத்த ஊழியரை, கும்பல் ஒன்று கம்புகளால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் உள்ள கல்காஜி பகுதியில் காளிதேவி கோவில் உள்ளது. இங்கு, உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த யோகேந்திரா சிங் என்பவர், கடந்த 15 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்கு வந்த சிலர், தரிசனம் செய்து விட்டு ஊழியர் யோகேந்திராவிடம் பிரசாதம் கேட்டுள்ளனர். அவர் வழங்க மறுத்ததால், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யோகேந்திராவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த கும்பல், கம்புகள் மற்றும் கைகளால் தாக்கியதில் யோகேந்திரா மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர்கள் தப்பியோடினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மயங்கி கிடந்த யோகேந்திராவை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தக் ஷின்புரி பகுதியைச் சேர்ந்த அதுல் பாண்டே, 30, என்பவரை கைது செய்தனர்.
கோவில் ஊழியரை தாக்கிய மற்றவர்களை கோவில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.