ஜெய்ப்பூரில் கோவில் சூறையாடல் போராட்டம் நடத்தியவர்கள் கைது
ஜெய்ப்பூரில் கோவில் சூறையாடல் போராட்டம் நடத்தியவர்கள் கைது
ADDED : மார் 30, 2025 04:04 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் ஜெய்ப்பூரில் தேஜாஜி கோவில் உள்ளது.
வழிபாட்டிற்காக வழக்கம்போல் நேற்று காலை கோவிலை திறந்தபோது, உள்ளே இருந்த கடவுள் சிலைகள் சேதமடைந்து இருப்பதை பார்த்து, கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இச்சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தி, அவர்கள் முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து, சிலர் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர்.
அதன்பின், போக்குவரத்து சீரானது. கோவில் சூறையாடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.