ADDED : அக் 31, 2025 02:05 AM
புதுடில்லி:  தலைநகர் டில்லியில், 100 இடங்களில் 'அடல் கேன்டீன்' துவங்க இதுவரை 54 டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதி 46 கேன்டீன்களுக்கு இடம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 101வது பிறந்த நாள் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தலைநகர் டில்லி முழுதும் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் அடல் கேன்டீன் 100 இடங்களில் திறக்கப்படும் என, டில்லி முதல்வர் ரேகா குப்தா தன் முதல் பட்ஜெட்டில் அறிவித்தார்.
இந்தப் பணி, டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில், சத்தர்பூர், சங்கம் விஹார், கிரேட்டர் கைலாஷ், ஹரி நகர், மடியாலா, ஜனக்புரி, விகாஸ்புரி, துவாரகா, சோனியா விஹார், மாடல் டவுன், திமர்பூர், உத்யோக் பவன், மங்கோல்புரி, வஜிர்பூர் மற்றும் மெஹ்ராலி உட்பட 54 இடங்களில் அடல் கேன்டீன்கள் அமைக்க டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மீதி 46 இடங்களை அடையாளம் காணும் பணியில் வாரிய அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அடல் கேன்டீனில் 5 ரூபாய்க்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு டில்லி அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில், மாதிரி அடல் கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்க விரும்புவோர் அந்த கேன்டீனை பார்வையிட்டு அதேபோல் அமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

