மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இளைஞர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இளைஞர் சுட்டுக் கொலை
ADDED : பிப் 15, 2024 05:23 AM

இம்பால்: மணிப்பூரில், போலீஸ் பயிற்சி கல்லுாரிக்குள் கிராம தன்னார்வலர்கள் நேற்று முன்தினம் ஊடுருவ முயன்ற போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி பிரிவினர் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நிலவி வருகிறது. இதில், 180 பேர் இறந்துள்ளனர்.
தற்போது பல்வேறு மாவட்டங்களில் அமைதி திரும்பி இருந்தாலும், ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் அங்கு உள்ள கிராமங்களில், மோதல்களை சமாளிக்க, ஆயுதம் ஏந்திய கிராம தன்னார்வலர்கள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களில் ஒரு கிராம தன்னார்வ குழுவினர் நேற்று முன்தினம் இரவு இம்பால் கிழக்கு மாவட்டம் பங்கேய் பகுதியில் உள்ள மணிப்பூர் போலீஸ் பயிற்சி கல்லுாரிக்குள் ஊடுருவ முயற்சித்தனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
அதை மீறியும் கல்லுாரி வளாகத்திற்குள் அவர்கள் நுழைந்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஓக்ராம் சானடான், 24, என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
இந்த ஊடுருவலுக்கு முன்பாக கிராம தன்னார்வலர்கள் சிலர், சமூக வலைதளங்களில் எதிரிகளுடன் சண்டையிட தேவையான ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதாக பதிவிட்டு உள்ளனர். எனவே போலீஸ் பயிற்சி கல்லுாரிக்குள் ஊடுருவி, ஆயுதங்களை கொள்ளை அடிக்க அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

