லடாக்கில் பதற்றம் தொடர்கிறது; ராணுவ தளபதி திவேதி தகவல்
லடாக்கில் பதற்றம் தொடர்கிறது; ராணுவ தளபதி திவேதி தகவல்
ADDED : ஜன 14, 2025 12:07 AM
புதுடில்லி : ''கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பதற்றமான சூழல் தொடர்ந்தாலும், நிலைமை சீராக உள்ளது,'' என, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி குறிப்பிட்டார்.
டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறியதாவது:
கிழக்கு லடாக் பிராந்தியத்தில், இன்னும் ஓரளவு பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிகள் துவங்கியுள்ளன.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழல் உணர்வுப்பூர்வமானது. அதே சமயம், அங்கு நிலைமை சீராக உள்ளது. நம் படைகள் வலுவாக உள்ளன. எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் திறன், நம் படைகளுக்கு உள்ளன.
எல்லை உட்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஜம்மு - காஷ்மீரை பொறுத்தவரை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
எனினும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில், 60 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.