sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விவசாயிகள் முற்றுகையால் டில்லியில் பதற்றம்

/

விவசாயிகள் முற்றுகையால் டில்லியில் பதற்றம்

விவசாயிகள் முற்றுகையால் டில்லியில் பதற்றம்

விவசாயிகள் முற்றுகையால் டில்லியில் பதற்றம்


UPDATED : பிப் 14, 2024 10:25 AM

ADDED : பிப் 13, 2024 11:42 PM

Google News

UPDATED : பிப் 14, 2024 10:25 AM ADDED : பிப் 13, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபை சேர்ந்த விவசாய சங்கத்தினர்நேற்று துவங்கிய, 'டில்லி சலோ' என்ற, டில்லி முற்றுகை போராட்டத்தை, போலீசார்ஹரியானா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி, தடுப்புகளைஇடித்துத் தள்ளி, விவசாயிகள் முன்னேறிச் சென்றதை அடுத்து, கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் நிலவியது.

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு அதிக இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்சா மற்றும் கிசான் மஸ்துார் மோர்சா உள்ளிட்ட, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களின் விவசாய சங்கத்தினர் 'டில்லி சலோ' என்ற போராட்டத்தை அறிவித்தனர்.

முடிவு எட்டப்படவில்லை


இதையடுத்து, விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியுஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் நேற்று முன்தினம் பல மணி நேரம் நடத்திய பேச்சில், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி.,யிலிருந்து நேற்று காலை டில்லி நோக்கி புறப்பட்டனர். பேருந்துகள், டிராக்டர்கள் என, நுாற்றுக்கணக்கான வாகனங்களில், ஆறு மாதம் உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான விவசாயிகள் சாரை சாரையாக புறப்பட்டனர். பல விவசாயிகள், கட்டடங்களை இடிக்க பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரங்களிலும் வந்தனர்.

அவர்களை ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அதை மீறி போலீசார் அமைத்திருந்த இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து முன்னேறினர். இதைத் தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாகவும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

போர்க்களமானது


இதனால், அந்த பகுதியே புகை மண்டலமானது. போராட்டக்காரர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடியதால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஹரியானா -- டில்லி தேசிய நெடுஞ்சாலையில் பதற்றமும் நிலவியது.இதையடுத்து, ஹரியானாவின் எல்லைப் பகுதிகளான அம்பாலா, ஜிந்த், பதேஹாபாத், குருஷேத்ரா, சிர்சா உள்ளிட்ட பகுதிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சாலை நடுவே, கான்கிரீட்களால் ஆன தற்காலிக சுவர்கள், வாகனங்கள் செல்லமுடியாத வகையில் சாலையின் குறுக்கே ஆணிகள், முள் கம்பிகளால் ஆன வேலிகள் அமைத்துள்ளனர். கலவர தடுப்பு வாகனம், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ட்ரோன் வாயிலாகவும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி தொடர்கிறது.

ஜிந்த் எல்லையிலும் போலீசார் மற்றும் விவசாய சங்கத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஹரியானாவின், 15 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு, 64 கம்பெனி துணை ராணுவப்படையினர் மற்றும் 50 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட போராட்டத்துக்கு தயாரான விவசாயிகள்?


விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இதில், உ.பி., - பஞ்சாப் - ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன், போராட்டத்துக்குவிவசாயிகள் புறப்பட்டுள்ளனர். மேலும், லாரி, டிராக்டர்களுக்கு தேவையான டீசலையும் வைத்துள்ளனர். இதன்படி பார்த்தால், நீண்ட கால போராட்டத்துக்கு விவசாயிகள் தயார் நிலையில் இருப்பது தெரிகிறது.

மத்திய அரசின் கோரிக்கை: டில்லி அரசு நிராகரிப்பு


விவசாயிகள் போராட்டத்தை அடுத்து, டில்லியில் உள்ள பவானா மைதானத்தை தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற அனுமதிக்கும்படி, அங்கு ஆட்சியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.இந்த கோரிக்கையை நிராகரித்த டில்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், 'விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கிறது. எனவே, விவசாயிகளை கைது செய்வது தவறானது. உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது' என, கடிதம் அனுப்பி உள்ளார்.

நெரிசலில் சிக்கிய வழக்கறிஞர்கள்!


பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாய சங்கத்தினர், டில்லிக்குள் நுழைய முடியாதபடி, எல்லை முழுதும் மூடப்பட்டுள்ளது. இதனால், டில்லியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு நேரத்திற்கு ஆஜராக முடியாமல், வழக்கறிஞர்கள் பலர் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். இதைக் கேள்விப்பட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''வழக்கறிஞர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தால் நாங்கள் அதை பொறுத்துக் கொள்ள தயாராக உள்ளோம்,'' என்று தெரிவித்தார்.

பேச்சுக்கு வர வேண்டும்!


பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அவசர கதியில் நடைமுறைப்படுத்த முடியாது. இதை விவசாயிகள் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான பேச்சு நடத்த முன்வர வேண்டும். விவசாயிகள் போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்ற, சில தீயசக்திகள் முயற்சித்து வருகின்றன. இதற்கு விவசாயிகள் இடமளிக்கக் கூடாது என்றார்.

மெட்ரோ நிலையங்களின் நுழைவாயில்கள் மூடல்


விவசாயிகள் போராட்டத்தை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, டில்லியில் உள்ள ராஜிவ் சவுக், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், படேல் சவுக், உத்யோக் பவன் உள்ளிட்ட எட்டு மெட்ரோ நிலையங்களின் பல்வேறு நுழைவாயில்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில நுழைவு வாயில்களில் மட்டுமே, மெட்ரோ நிலையங்களுக்குள் பயணியர்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெயர்களை பரிந்துரைக்காத சங்கம்!


குறைந்தபட்ச ஆதரவு விலையை மேலும் பயனுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மாற்ற, 2022 ஜூலை 12ல், முன்னாள் வேளாண் துறை செயலர் சஞ்சய் அகர்வால் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. இதில், மத்திய, மாநில அரசுகள், வேளாண் விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், விவசாய பிரதிநிதிகள் உட்பட 29 பேர் இடம் பெறுவர் என்று கூறப்பட்டது. இப்போது போராட்டம் அறிவித்து இருக்கும் சம்யுக்த் கிசான் மோர்சா சார்பில், மூன்று பெயர்களை பரிந்துரைக்கும்படி கேட்கப்பட்டது. ஆனால், அந்த விவசாய சங்கம் தரப்பில் இதுவரை பெயர்களை பரிந்துரைக்கவில்லை என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us