ADDED : ஏப் 15, 2025 06:46 PM
புதுடில்லி:டில்லி சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக டி-2 எனப்படும் இரண்டாவது முனையம் மூடப்பட்டது. இதனால், டி -1 எனப்படும் முதலாவது முனையத்தில் இருந்தே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தலைநகர் டில்லியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை, 'டயல்' எனப்படும் டில்லி இன்டர்நேஷனல் ஏற்போர்ட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்துகிறது.
இங்கு, நான்கு ஓடுபாதைகள் உள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டி - 2 முனையம் பராமரிப்பு பணிகளுக்காக நேற்று மூடப்பட்டது. இதையடுத்து, இங்கிருந்து இயக்கப்பட்ட விமானங்கள் டி-1 முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
முனையம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறித்து, பயணியருக்கு நேற்று முன் தினமே அறிவிக்கப்பட்டது.
விரிவாக்கம் செய்யப்பட்டு மார்ச் 20ம் தேதி திறக்கப்பட்ட டி - 1 முனையத்தில் ஆண்டு தோறும் 40 மில்லியன் பயணியரை கையாள முடியும். அதேபோல, டி -3 முனையத்தில் ஆண்டு தோறும் 45 மில்லியன் பயணியர் கையாளப்படுகின்றனர். தற்போது, பராமரிப்பு பணி துவக்கப்பட்டுள்ள டி-2 முனையத்தில் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணியரை கையாள முடியும்.

