திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நவ., 9-ல் சேவை நிறுத்தம்
திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நவ., 9-ல் சேவை நிறுத்தம்
ADDED : நவ 04, 2024 11:14 PM
திருவனந்தபுரம்; திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில், 10 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழாவின் நிறைவாக சுவாமி ஆராட்டு நிகழ்வு சங்கு முகம் கடற்கரையில் நடைபெறும்.
இதற்காக, ஆராட்டு பவனி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து செல்ல வேண்டும். அந்த நேரத்தில் விமான நிலையத்தில் விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படும்.
இந்த ஆண்டு நவ., 9ம் தேதி ஐப்பசி திருவிழா ஆராட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம் நிறுத்தப்படும். இது குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 1932-ல் இங்கு விமான நிலையம் நிறுவப்பட்ட போது, '363 நாட்கள் பொது மக்களுக்காகவும், இரண்டு நாட்கள் பத்மநாப சுவாமிக்காகவும் விமான நிலையம் திறந்திருக்கும்' என, அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் கூறியிருந்தார். அதன்படி, இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.