காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்
காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்
UPDATED : ஜூன் 12, 2024 10:47 AM
ADDED : ஜூன் 12, 2024 08:24 AM

ஜம்மு: காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்று( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
கடந்த 9ம் தேதி காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். பின்னர் நேற்று கத்துவா மாவட்டத்தில் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் அளித்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்நிலையில் நேற்று இரவு தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பொது மக்கள் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 5 பேர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், ட்ரோன் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.