காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத குழு ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத குழு ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
ADDED : டிச 12, 2025 05:30 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாத குழுவினர் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு பயங்கரவாதக் குழு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர்.
பின்னர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படையினர் அந்தக் குழுவை வெற்றிகரமாக சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் 3 பேர் சரணடைந்தனர்.
அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் தொலைபேசிகள் ஆகியவை அடங்கும். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

