ADDED : மே 28, 2025 03:45 AM
அமிர்தசரஸ் : பஞ்சாபில், மறைத்து வைத்த குண்டை எடுக்க முயன்ற போது, அது வெடித்து சிதறியதில் பாபர் கல்சா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி நேற்று உயிரிழந்தார்.
பஞ்சாபில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் உள்ளது. அவர்களை தீவிரமாக கண்காணித்து ஒடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசு ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அமிர்தசரஸ் நகரின் புறவழிச்சாலை அருகே நேற்று குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'இறந்த நபர் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பில் ஒன்றான பாபர் கல்சாவைச் சேர்ந்தவர்.
'பதுக்கி வைத்த குண்டை எடுக்க முயன்றபோது, அதை தவறாக கையாண்டுள்ளார். அதனால் குண்டுவெடித்து அவர் உயிரிழந்தார். அவரது நோக்கம் என்ன, எப்படி வெடிகுண்டு கிடைத்தது என தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.