ஹிந்து அமைப்பினருக்கு குறிவைத்த பயங்கரவாதிகளின் சதி. முறியடிப்பு! 8 பேர் சிக்கினர்
ஹிந்து அமைப்பினருக்கு குறிவைத்த பயங்கரவாதிகளின் சதி. முறியடிப்பு! 8 பேர் சிக்கினர்
ADDED : டிச 20, 2024 12:47 AM

குவஹாத்தி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் முக்கிய ஹிந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல் - குவைதாவுக்கு நெருக்கமான வங்கதேச பயங்கரவாதி உட்பட எட்டு பேரை, அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். இதனால், நாடு முழுதும் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் - குவைதா அமைப்பின் கிளையான, 'அன்சாருல்லா பங்க்ளா டீம்' என்ற அமைப்பு, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஜசிமூதின் ரஹ்மானி உள்ளார்.
இவரது நெருங்கிய உதவியாளரான முஹமது பர்ஹான் இஸ்ராக், நம் நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் முக்கிய ஹிந்து அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் இது தொடர்பான ஆலோசனையில் அன்சாருல்லா குழுவின், 'ஸ்லீப்பர் செல்கள்' ஈடுபட்டுள்ளதாக அசாம் போலீசாருக்கு, உளவுத் துறை சமீபத்தில் தகவல் அளித்தது.
கண்காணிப்பு தீவிரம்
இதையடுத்து, அசாமில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, வங்கதேசத்தில் இருந்து முஹமது சாப் ஷேக், 32, என்ற நபர் அசாம் வந்து தங்கியிருந்து சிலரை சந்தித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை பின்தொடர்ந்ததில், மேற்கு வங்கத்திலும் அதைத் தொடர்ந்து கேரளாவிலும் சென்று வேறு சிலரை சாப் ஷேக் சந்தித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மூன்று மாநிலங்களில் அவர் சென்ற இடங்களில் அசாம் அதிரடிப் படையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தினர். இதன் முடிவில், சாப் ஷேக்கை அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு: மினருல் ஷேக், 40, முஹமது அப்பாஸ் அலி, 33, நுார் இஸ்லாம் மண்டல், 40, அப்துல் கரீம் மண்டல், 30, முஜிபுர் ரஹ்மான், 46, ஹமிதுல் இஸ்லாம், 34, எனாமுல் ஹக், 29. இவர்களில், நுார் இஸ்லாம் மண்டல், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்று, அங்குள்ள இளைஞர்களை அல் - குவைதா மற்றும் அன்சாருல்லா குழுக்களில் சேர மூளைச்சலவை செய்ததாக அதிரடி படையினர் தெரிவித்தனர்.
நாசவேலை
இது குறித்து அசாம் சிறப்பு டி.ஜி.பி., ஹர்மீத் சிங் கூறியதாவது:
வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல், நம் நாட்டில் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அச்ச உணர்வை, இந்த கைது சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
இதுவரை நடந்த முதற்கட்ட விசாரணையில் இருந்து, கைது செய்யப்பட்டவர்கள் நாடு முழுதும் வன்முறை மற்றும் நாசவேலை சம்பவங்களில் ஈடுபட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
படுகொலைகள், வகுப்புவாத நல்லிணக்கத்தை, அமைதியை சீர்குலைக்கும் சூழலை உருவாக்க அவர்கள் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அசாம், மேற்கு வங்கம், கேரளாவுக்கு சென்று, அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பினரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவர்கள் திட்டம் குறித்த முழு விபரங்கள் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அசாம் சிறப்பு அதிரடிப் படையினரின் முயற்சியால், நாடு முழுதும் நடக்கவிருந்த பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட்டுள்ள சூழலில், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கைது சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.