ADDED : ஏப் 15, 2025 12:46 AM

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 2008 நவ., 26ல், ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர் - இ - தொய்பா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானில் பிறந்து, வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த 9ம் தேதி இந்தியா அழைத்து வந்தனர்.
அவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை புலனாய்வு அதிகாரியான ஜெயா ராய் தலைமையிலான குழு, அவரிடம் நாள்தோறும் 8 - 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்கு ராணா உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறினர்.
தனக்காக பேனா, பேப்பர் ஆகியவற்றை மட்டும் கேட்ட ராணா, உணவு தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை வைத்து ராணாவிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது தொலைபேசி அழைப்பு, பாஸ்போர்ட்டில் பதிவான நாடுகளுக்கு சென்றது குறித்து, தாக்குதலுக்கு முன் ராணா இந்தியா வந்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவ்வப்போது பல முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக ராணா பதிவு செய்து வருவதாக என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.