பயங்கரவாதி ராணாவை நாடு கடத்த தீவிரம்; அமெரிக்கா செல்கிறது என்.ஐ.ஏ., குழு!
பயங்கரவாதி ராணாவை நாடு கடத்த தீவிரம்; அமெரிக்கா செல்கிறது என்.ஐ.ஏ., குழு!
ADDED : ஜன 28, 2025 02:04 PM

புதுடில்லி: பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்தி கொண்டு வர என்.ஐ.ஏ., குழுவினர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கும் உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் நம் நாட்டு அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, ராணாவை நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. நாடு கடத்தலுக்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது.
இதன் வாயிலாக, நாடு கடத்தலுக்கு எதிராக ராணா மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் ராணாவை நாடு கடத்தி கொண்டு வர என்.ஐ.ஏ., குழுவினர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளனர். அவன் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வரப்படுவான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.