டில்லி குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாதி மிரட்டல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
டில்லி குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாதி மிரட்டல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 14, 2025 07:56 AM

புதுடில்லி: டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழாவிற்கு, பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை இந்தியா அழைப்பது வழக்கம். கடந்த 2024ம் ஆண்டு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றார். இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ பங்கேற்க உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த்சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள அவன் கூறியிருப்பதாவது: டில்லி, குடியரசு தின அணிவகுப்புக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பாதீர்கள், வீட்டிலேயே இருங்கள். மோடியின் இந்துத்துவா ஆட்சிக்கு, எதிராக தாக்குதல் நடத்துவோம். இதற்கு 1.25 லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு குர்பத்வந்த்சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். சமீபத்தில் மஹா கும்பமேளா நிகழ்ச்சிக்கு மிரட்டல் விடுத்தான்.
இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: அமைதியான முறையில் குடியரசு தின விழாவை நடத்த அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அணிவகுப்பு நடக்க உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.
வெடிகுண்டு செயலிழப்புப் படையின் உதவியுடன் கண்காணித்து வருகிறோம். நமது ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரர்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். சந்தேகத்திற்குரிய நபர்கள் வருகையை கட்டுப்படுத்த எல்லைகளை சீல் வைப்பது தொடர்பாக அண்டை மாநில போலீசாருடன் சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. எல்லைப் பகுதியில் வாகனங்கள் உட்பட அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்?
* குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸின் புறநகரில் உள்ள கான்கோட் கிராமத்தில் பிறந்தவன் 1992 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தான்.
குர்பத்வந்த் சிங் பன்னுன் தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில், ஜூலை 2020ல் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டான்.
* இவனது பயங்கரவாத அமைப்புக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இவன் இந்தியாவில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.