புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை
ADDED : மே 22, 2026 02:01 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணமடைந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹம்சா புர்ஹான், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த 2019, பிப்., 14ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு, வெடி பொருட்களை வினியோகித்து, மூளையாக செயல்பட்ட ஹம்சா புர்ஹான் என்ற பயங்கரவாதியை, மத்திய உள்துறை அமைச்சகம் தேடப்படும் குற்றவாளியாக 2022ல் அறிவித்தது.
இதையடுத்து, அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தலைமறைவானார்.
இந்நிலையில், அங்குள்ள முசாபராபாத் பகுதி யில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், உடலில் பல இடங்களில் குண்டு காயங்கள் பட்டு, சம்பவ இடத்திலேயே ஹம்சா புர்ஹான் உயிரிழந்தார். இவரைச் சுட்டுக் கொன்ற நபர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
