குண்டுவெடிப்பில் தரைமட்டமான பயங்கரவாதிகளின் வீடுகள்
குண்டுவெடிப்பில் தரைமட்டமான பயங்கரவாதிகளின் வீடுகள்
ADDED : ஏப் 26, 2025 12:48 AM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பயங்கரவாதிகளில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த இருவரின் வீடுகள் நேற்று குண்டு வெடித்ததால் தரைமட்டமாகின.
கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மற்றும் உதவியதாக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரின் வீடுகளும் நேற்று முன்தினம் இரவில் தனித்தனியாக தீயில் எரிந்து சாம்பலாகின. குண்டுகள் வெடித்ததால், இந்த வீடுகள் தரைமட்டமானதாக கூறப்படுகிறது.
இந்த குண்டுகளை வைத்தது யார் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் வீட்டின் உள்ளே இருந்த வெடிகுண்டுகள் வெடித்து, வீடுகள் இடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவர் தவிர்த்து, தாக்குதலில் ஈடுபட்ட ஹசிம் முசா என்ற சுலைமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகியோர், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதிகள். இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, ஜம்மு - காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

