பாகிஸ்தானில் உருவான பஹல்காம் தாக்குதல் சதித்திட்டம்: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்
பாகிஸ்தானில் உருவான பஹல்காம் தாக்குதல் சதித்திட்டம்: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்
ADDED : மே 22, 2026 03:31 PM

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது, கொண்டாடியது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.
குற்றப்பத்திரிகை
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வந்த அப்பாவி மக்களை, பயங்கரவாதிகள் 3 பேர் மதத்தை கேட்டு சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பைசல் ஜாட் என்ற சுலைமானி ஷா, ஹபீப் தாஹிர் என்ற ஜிப்ரன் மற்றும் ஹம்சா ஆப்கானி என்ற பயங்கரவாதிகளை ஜூலை 29ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் 1,597 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்தது. அதில், பாகிஸ்தானில் உருவான இந்த சதித்திட்டம் விவரிக்கப்பட்டு உள்ளது.
திட்டம்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் என்ற பயங்கரவாதஅமைப்பின் தலைவன் ஹபிபுல்லா மாலிக் ஆகியோர் சேர்ந்து இந்த கொடூரமான தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மூவரும், பைசரன் பள்ளத்தாக்கில் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி உள்ளனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது என்பவன் உதவி உள்ளான். அங்கு அவர்கள், பஞ்சாபி கலந்த உருது மொழியில் பேசி உள்ளனர். அங்கேயே, தங்களது உடைமைகளை வைத்துள்ளனர். மறுநாள் அங்கேயே ரொட்டி தயாரித்துள்ளனர்.
மறுநாள் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்ற முன்னதாகவே சென்ற பயங்கரவாதிகள் மூவரும், மரத்தின் அடியில் அமர்ந்து உணவருந்தி உள்ளனர். பிறகு தங்களது பையில் இருந்து போர்வை மூலம் தங்களது அடையாளத்தை மறைத்துள்ளனர்.
அதன் பிறகு இருவர், அந்த பகுதியில் உள்ள சிற்றோடை பகுதிக்கு சென்று மறைந்ததுடன், அங்கு நடப்பதை கண்காணித்துள்ளனர். இதன் பிறகு, தங்களது உடைமைகளை வைத்த இடத்திற்கு சென்று அதனை எடுத்து வந்ததுடன், மீண்டும் பூங்காவிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றனர்.
பிறகு அங்கிருந்து தப்பி செல்லும்போது ஒரு இ டத்தில் மறைந்து இருந்தனர். அங்கு வந்தவர்களையும் சுட்டுக் கொன்றனர். செல்லும் வழியில் வந்த ஒருவரை மறித்து, முஸ்லிம் நடைமுறை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதில் கூறியதால், அவரை விட்டு சென்றனர்.
பூங்காவில் இருந்து வெளியேறும்போது, தங்களது சதி திட்டம் வெற்றி பெற்றதை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடி உள்ளனர். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
