செங்கோட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இரு ஆண்டாக திட்டமிட்ட பயங்கரவாதிகள்
செங்கோட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இரு ஆண்டாக திட்டமிட்ட பயங்கரவாதிகள்
ADDED : நவ 22, 2025 11:26 PM

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி முஸம்மில், 6.50 லட்சம் ரூபாய்க்கு ஏ.கே., 47 துப்பாக்கி வாங்கியதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த, 'ஹுண்டாய் ஐ - 20' கார் வெடித்து சிதறியதில், காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் பலியாகினர்.
விசாரணை
இந்த தற்கொலைப்படை தாக்குதலை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த உமர் நபியின் நெருங்கிய கூட்டாளியான டாக்டர் முஸம்மிலிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக துருவி துருவி நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து என்.ஐ.ஏ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கைதான டாக்டர் முஸம்மிலிடம் நடத்திய விசாரணையில், டில்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த, 2023ம் ஆண்டு முதலே அவர்கள் திட்டமிட்டு வந்தது தெரிந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளாக வெடிமருந்துகள் மற்றும் அது தொடர்பான பொருட்களை வாங்கியுள்ளனர். கைதான நால்வரும், இதற்காக, 26 லட்சம் ரூபாய் சொந்த பணத்தை செலவழித்துள்ளனர்.
ஹரியானா, குருகிராம், நுாஹ் ஆகிய பகுதிகளில் இருந்து, 26 குவின்டால் உரங்களை, 3 லட்சம் ரூபாய்க்கு முஸம்மில் வாங்கியுள்ளார். வெடிமருந்து ரசாயனங்களை தயாரித்து பாதுகாப்பாக வைக்க, 'பிரீசர்' ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார்.
வெடி பொருட்கள்
முஸம்மில் மற்றும் அவரது நண்பர்கள் வாங்கிய வெடி மருந்துகள், உரங்களை வைத்து வெடிபொருட்களை சொந்தமாகவே தயாரித்துள்ளனர்.
ஹரியானாவின் பரிதாபாதில் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் சொந்தமாகவே மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கி, வெடிமருந்துகள் தயாரித்து வந்ததை முஸம்மில் ஒப்புக் கொண்டார்.
அவர் அளித்த தகவலின்படி, பரிதாபாதில் டாக்சி ஓட்டுநர் ஒருவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் வேறு சில இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாக்சி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முஸம்மில் பணிபுரிந்த அல் பலாஹ் பல்கலையில் உள்ள மருத்துவமனைக்கு, தன் மகனின் சிகிச்சைக்காக சென்றபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாக டாக்சி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 6.50 லட்சம் ரூபாய்க்கு ஏ.கே., 47 ரக இயந்திர துப்பாக்கியை வாங்கியதையும் முஸம்மில் ஒப்புக்கொண்டார்.
இந்த துப்பாக்கி, ஜம்மு - காஷ்மீரில் இருந்த மற்றொரு கூட்டாளியான ஆதில் அகமதுவின் லாக்கரில் இருந்து சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

