விரைவில் இந்தியாவில் கால்பதிக்கிறது டெஸ்லா நிறுவனம்?
விரைவில் இந்தியாவில் கால்பதிக்கிறது டெஸ்லா நிறுவனம்?
ADDED : ஜூன் 08, 2024 02:01 PM

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு, டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்ததற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதனை வைத்து, டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என தொழில்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆலோசனை
உலகின் முன்னணி மின்னணு கார் தயாரிக்கும் நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா விளங்குகிறது. சீனாவில் அந்த நிறுவனத்திற்கு கார் தயாரிக்கும் ஆலை உள்ள நிலையில், இந்தியாவிலும் ஆலை துவங்க திட்டமிட்டது. இது தொடர்பாக இந்திய அரசும், டெஸ்லா நிறுவனமும் பேசி வந்தன. இதற்காக எலான் மஸ்க் இந்தியா வர இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வருகையையும், பிரதமர் மோடியை சந்திப்பையும் எதிர்பார்த்து உள்ளதாக கூறியிருந்தார். ஆனால், அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. விரைவில் இந்தியா வருவேன் என எலான் மஸ்க் கூறியிருந்தார்.
வாழ்த்து
இந்நிலையில், பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‛‛ உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனம் சிறந்த பணி செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்'' எனக்கூறி இருந்தார்.
நன்றி
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‛‛ எலான் மஸ்க்கை பாராட்டுகிறேன். திறமையான இந்திய இளைஞர்கள், நமது மக்கள் தொகை, கொள்கைகள் மற்றும் நிலையான ஜனநாயக அரசியல் ஆகியவை, எங்களது கூட்டாளிகளுக்கு வணிக சூழலை தொடர்ந்து வழங்கப்படும்'' எனக் கூறியிருந்தார். இந்த இருவரின் பதிவுகளை வைத்து, விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என தொழில்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.