பாக்கெட் உணவுகளில் வாசகம்: மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு
பாக்கெட் உணவுகளில் வாசகம்: மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு
ADDED : ஏப் 11, 2025 06:47 AM

புதுடில்லி : பாக்கெட்கள் மற்றும் கன்டெய்னர்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த விபரங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்ற உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த, மத்திய அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில் உள்ள உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளை பெரிய எழுத்துருவில் அச்சிடும் பரிந்துரைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், 2014ல் ஒப்புதல் அளித்தது.
இருப்பினும் இது முழுமையான நடைமுறைக்கு வரவில்லை. இதை தொடர்ந்து, பாக்கெட் உணவுப் பொருட்களில் எச்சரிக்கை வாசகத்தை கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உங்களுக்கு பேரக்குழந்தைகள் இருக்கின்றனரா? மனு மீதான உத்தரவு வரட்டும். அப்போது தான் குர்குரே மற்றும் மேகியில் என்னென்ன இருக்கிறது, அதன் மேல் உறை எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவீர்கள். அதில் எவ்வித தகவல்களும் தற்போது இடம் பெறவில்லை.
பாக்கெட்கள் மற்றும் கன்டெய்னர்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த விபரங்களை அதில் பெரிய எழுத்துருவில் அச்சிட வேண்டும். இதை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

