ADDED : பிப் 13, 2025 05:23 AM

மைசூரில் பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், தலக்காடுக்கு முக்கியத்துவம் அதிகம். ஆத்திகர்கள், நாத்திகர்கள் என, இருவருக்கும் பிடித்தமான தலமாகும். இங்கு வந்தால் திரும்பி செல்லவே, மனம் வராது.
மைசூரு மாவட்டத்தில், அரண்மனை, சாமுண்டி மலை, திப்பு கோட்டை, மிருகக்காட்சி சாலை என, பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றில் டி.நரசிபுராவின் தலக்காடு முக்கியமானதாகும்.
மைசூரில் இருந்து 45 கி.மீ., தொலைவு உள்ளது. தலக்காடு இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுலா தலம் மட்டுமல்ல, பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது.
தலா மற்றும் காடா என்ற, இரண்டு வேடுவ சகோதரர்கள் இங்கு குடிகொண்டுள்ள வைத்ய நாதேஸ்வரரை வழிபட்டு, மோட்சம் பெற்றதால், இந்த இடத்துக்கு தலக்காடு என, பெயர் ஏற்பட்டதாம்.
சோமதத்தா ரிஷி மற்றும் சீடர்களுக்கு இங்கு மோட்சம் கிடைத்ததால், கஜாரன்யா, சித்தாரன்யா என்றும் அழைக்கின்றனர். கங்கர்களின் தலைநகராகவும் இருந்தது.
காவிரி ஆற்றங்கரையில் உள்ள தலக்காடு, சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. இப்பகுதி மன்னர்கள் ஆண்ட இடமாக இருந்ததாம்.
வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால், ஆறாவது நுாற்றாண்டில் இருந்து, பத்தாவது நுாற்றாண்டு வரை, தலக்காடை தலைநகராக வைத்து கொண்டு, கங்கர்கள் ஆட்சி நடத்தினர்.
10வது நுாற்றாண்டின் இறுதியில், தலக்காடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை, சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் வசப்படுத்தி கொண்டார்.
அதன்பின் 130 ஆண்டுகள் சோழர்கள் ஆட்சி நடத்தினர். 1117ல் ஹொய்சாள மன்னர் விஷ்ணு வர்தனா, யுத்தத்தில் வெற்றி பெற்று சோழர்களை தோற்கடித்து இப்பகுதியை கைப்பற்றியதால், விஷ்ணு வர்தன், 'தலக்காடு கொண்டான்' என்ற பட்டம் பெற்றார். ஹொய்சாளர்களுக்கு பின், தலக்காடு மைசூரு உடையார் ஆளுமைக்கு வந்தது.
பொதுவாக தலக்காடுக்கு வரும் சுற்றுலா பயணியர், தலக்காடில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள மணல்மேடுகளை கண்டு ரசிக்கின்றனர். 3 கி.மீ., வரை, 40 அடிக்கும் அதிகமான உயரத்தில் மணல் மேடு உருவாகியுள்ளது.
இது தலக்காடின் சிறப்புகளில் ஒன்றாகும். இயற்கையான முறையில் உருவான மணல் மேடு, சுற்றுலா பயணியரை ஆச்சர்யப்படுத்துகிறது.
இங்கு வைத்ய நாதேஸ்வரா, அர்க்கேஸ்வரா, மரளேஸ்வரா, பாதாளேஸ்வரா என்ற, நான்கு சிவன் கோவில்கள் உள்ளன. கோவில்களை சுற்றிலும் மணல் பரவியுள்ளது.
இதனால் கோவில்கள் அடிக்கடி மணலில் புதைந்து விடுகின்றன. பஞ்சலிங்க தரிசனம் நிகழ்ச்சியின் போது, மணலை தோண்டி எடுத்து, கோவில்களில் பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்களின் தரிசனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தலக்காடு தன்னுடையதே ஆன சிறப்பு, பாரம்பரியம் கொண்டுள்ளது. இங்கு பாயும் காவிரி ஆறு, தலக்காடின் அழகை மேலும் மெருக்கேற்றுகிறது. இதே காரணத்தால் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
பரபரப்பான நகர வாழ்க்கையில் அலுத்து போனவர்கள், வார இறுதியில் தலக்காடுக்கு வருகின்றனர். அமைதியான சூழ்நிலையில் பொழுது போக்கி, மன நிறைவோடு செல்கின்றனர்.
பக்தர்களும் அதிகம் வருகின்றனர். கோவில்களை தரிசனம் செய்து, காவிரி நீரில் புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து, 130 கி.மீ., தொலைவில் தலக்காடு உள்ளது. மைசூரில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், தலக்காடுக்கு அரசு, தனியார் பஸ் வசதி உள்ளது.
வாடகை வாகனங்களும் இயக்கப்படுகின்றன. தலக்காடு அருகில் சொகுசு விடுதிகள், ஹோட்டல்கள் ஏராளம். விடுமுறையை கொண்டாட ஏற்ற இடமாகும்
- நமது நிருபர் -.