ADDED : பிப் 15, 2024 06:29 AM

வாரத்தில் ஐந்து நாட்களும் வேலைக்கு செல்பவர்கள், மன அமைதி, புத்துணர்ச்சிக்காக குடும்பத்துடன் வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்ல நினைப்பர். அதுவும் ஒரே நாளில் சென்றுவிட்டு, வீடு திரும்பும் வகையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர்.
இத்தகையவர்களுக்கு, குறிப்பாக பெங்களூரு நகரவாசிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது தண்டிகானஹள்ளி ஏரி.
பெங்களூரில் இருந்து சிக்கபல்லாப்பூர் செல்லும் வழியில் உள்ளது தண்டிகானஹள்ளி கிராமம். இங்கு தண்டிகானஹள்ளி ஏரி உள்ளது. கிராமத்தில் இருந்து ஏரிக்கு செல்லும் வழியில், சாலையின் இருபக்கமும் பச்சை, பசலேன காட்சி அளிக்கும்.
ஏரியை அடைந்ததும், ஒரு இரும்பு பாலம் இருக்கும். அந்த பாலத்தின் மீது நடந்து சென்று, ஏரியின் முழு அழகையும் புகைப்படம் எடுத்து கொள்வதுடன், சுற்றுலா பயணியரும் செல்பி எடுத்து மகிழலாம்.
மாலை நேரத்தில் ஏரிக்கரையில், வண்ணமயமான பறவைகளை காணலாம். ஏரிக்கரையில் சைக்கிள் ஓட்டி சென்று, ஏரியை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாலையில் சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பதற்கும் ஏற்ற இடமாக உள்ளது.
சுற்றுலா பயணியர் ஏரிக்கரையில், கூடாரம் அமைத்து காலையில் இருந்து மாலை வரை தங்கியும் பொழுதுபோக்குகின்றனர். சிறுவர்கள் விளையாட்டு பொருட்களை எடுத்து சென்று, விளையாடவும் அங்கு இடம் உள்ளது.
ஏரிக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் ஏராளமான காய்கறி தோட்டங்கள், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டு ரசிக்கலாம். மொத்தத்தில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமான, தண்டிகானஹள்ளி ஏரிக்கு சென்று வாருங்கள்.
- நமது நிருபர் -

