குளம் சீரமைப்பாங்களா?
பொன் விளைகிற நகரின் நுழைவாயிலாக இருக்கிற ஆலமரம் பகுதியில், சோழர் காலத்து குளம் ஒன்று இருந்து வருது. இந்த குளத்தில் ஒரே ஒரு சொட்டு தண்ணீரும் காண முடியல. இதில் புதர் மண்டி கிடக்குது. இது கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பயன்படுகிற மாதிரி சீரமைக்கலாமே. இதே பகுதியில் சுத்தமான காற்றுக்கு, நடைபயிற்சிக்கு உருவான மரங்களின் பூங்காவை அழிக்க போறாங்களாம். அதே போல ஆயிரம் காலத்து குளத்தையும் அழித்திடுவாங்களோன்னு அச்சம் ஏற்படுது.
தீர்ப்புக்கு அலட்சியம்!
ப.பேட்டை தாலுகாவுக்கு யார் தான் வட்டாட்சியர் என இன்னும் கூட முடிவாகவில்லை. பொது ஜனங்களும் குழப்பத்தில் இருக்காங்க. எந்த ஒரு வேலையும் நடக்கலயாம். காலையில் மேடமும், மதியம் சாரும் நாற்காலியை பிடிச்சிக்கிறாங்க. இருவருமே நிரந்தரம் இல்லாமல் பகுதி நேரமாக, நாற்காலியை பங்கு போட்டுட்டு வராங்க. மாநில அளவில் இப்படியொரு ஒரு தாலுகா குளறுபடி வேறெங்குமே இருக்க வாய்ப்பே இல்ல.
லோக்கல் அசெம்பிளிக்காரருக்கு 'சார்' ஒத்து போகலங்கிறதற்காகவே அவரை இடமாற்றம் செய்தாங்களாம். ஆனால் அவரோ, இடமாற்றத்தை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு ஓடினாரு. அங்கு அவரையே பதவியில் தொடரும் படி, அவருக்கு தீர்ப்பும் கொடுத்தாங்க. ஆனாலும் பதவி நாற்காலியில் மாவட்ட நிர்வாகம் அமர வெச்ச மேடம், நாற்காலியை விட்டு தரல.
இப்படி ஒரு பதவிக்கு நாற்காலியில் இருவர், சிக்கலில் சிக்கி இருக்காங்க. இந்த இழுபறிக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு என்கிறாங்க. தீர்ப்பாய உத்தரவை மாவட்ட நிர்வாகம் ஏற்காமல், அலட்சியம் காட்டலாமான்னு அதிகாரிகள் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.
ஜல்லி சாலை மாறுமா?
கோல்டு சிட்டியின் சாம்பியன் மயான பகுதியில் சாலையை ஏற்படுத்த நவம்பரில் அவசர அவசரமாக ஜல்லி கற்களை கொட்டினாங்க. அத்தோடு சாலை பணி முடிந்து போனதா நெனச்சு, அதை மறந்துட்டாங்க போல. கொட்டின ஜல்லி எல்லாம் மாயமான பின் தான் மயான சாலை நெனப்பு வருமோ.
இதுமட்டுமல்ல, ரா.பேட்டை பி.எம்., சாலையை அகலப் படுத்துறதா நான்கு ஆண்டுக்கு முன்னாடியே வேலையை துவங்கினாங்க. வெறும் மண் தரையாகவே விட்டுட்டாங்க.
திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, கடந்த வாரம் தான் ஜல்லி, மண்ணை கொட்டினாங்க தார் எப்போ போடப்போறாங்களோ. இதை யார் அறிவாரோ.
காலம் தான் பதில்
முனிசி., சொத்துக்கு வேலி போடாமல் கவனிப்பாரற்று இருப்பதற்கு என்ன காரணமோ. நிலத்தை கொள்ளை அடிக்க, யாருக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் உள்நோக்கமோ.
ஆபீசர்களும் கண்டுக்கல; மக்கள் பிரதிநிதிகளும் அதன் மீது பார்வை செலுத்தல. இன்னும் ஒரு வருஷத்துக்குக்குள் கவுன்சிலர்கள் பதவிக்காலமும் முடிய போகுது. முனிசி., சொத்துகளை பாதுகாக்க இனி மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தான் ஸ்பெஷல் உத்தரவு போடணும். அதுவரைக்கும் மாபியா கும்பல், முனிசி, காலி நிலத்தை விட்டு வைப்பரா அல்லது சுவாஹா செய்திடுவாங்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.