தடை ஏன்?
பொங்கல் பண்பாட்டு விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடினாங்க. தங்கநகரில் நடந்த சங்க விழாவுல ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்கிற இந்த பண்பாட்டு திருநாளில், கை காரங்க யாரும் கலந்துக்க வேணாம்னு 'மேடம்' சிகப்பு கொடியை காட்டிட்டாங்களாம். இதனால, கைக்கார முனிசி., முன்னாள், இந்நாள் கைக்கார தலைவர்கள், உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமா பயந்து, தங்க நகர் தமிழர் ஊர்வல பக்கமே தலையை காட்டலயாம்.
அடுத்து, தமிழர் ஓட்டுகள் இல்லாம, அதிகார நாற்காலிகள் கிடைச்சிடுமா. ஒருகணம் யோசிக்க மறந்துட்டாங்களே. தங்க நகரத்தில் தமிழை பகைத்துக் கொண்டால், அரசியல் அதிகாரத்துக்கு தமிழர்கள் சிகப்பு கொடி ஆட்டும் காலம் வரத்தான் போகுது.
மொழியோட சக்தி என்னவென 1983 அசெம்பிளி தேர்தல் சாட்சியா இருக்குது. இதை அறிந்தவங்க இடத்தில் கேட்டு தெரிஞ்சிக்க வேணும்னு பெரியவங்க சொல்றாங்க.
தாமதம் ஏன்?
தங்கமான நகரம் தாலுகா தகுதி கிடைத்து 5 ஆண்டு முடிஞ்ச பிறகும் கூட முழு அளவில் அரசு இயந்திரம் முழுசா இயங்கலயே. ப.பேட்டையும் கூட தாலுகா தான். அங்கு இயங்குற அரசு இயந்திரம் போல கோல்டு சிட்டியும் இயங்கும் காலம் மலரப்போவது எப்பவோ.
ப.பேட்டை மருத்துவமனையில் கார்டியாலஜிஸ்ட், பிசிஷியன், டயாலிசிஸ், ஸ்கேனிங் என பல்வேறு துறைகளில் டாக்டர்கள் இருக்குறாங்களே, அதை பார்த்தாவது கோல்டு சிட்டியும் தாலுகா தகுதியில் இருக்குதென தெரிஞ்சிக்க வேணாமா.
இ.உணவகம் ப.பேட்டையில் திறந்து இருக்காங்களே, அதனை கோல்டு சிட்டியில் கொண்டு வருவதாக 'ரெடிமேட்' கட்டடம் நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் கூட இ.உணவகம் வந்தபாடில்லை. இந்த உணவகம் திறப்பதற்கு ஏன் கால தாமதம் செய்றாங்களோ தெரியலையே.
கேட்க ஆளில்லை?
ம.அரசின் மண்வாரி தொழிற்சாலையில் தான் வெளியிடத்து ஆட்களுக்கு வேலை வாய்ப்பு தராங்களேன்னு எதிர்ப்பு அலை ஓயவே இல்லை. இப்போ, முனிசி.,யில் கூட, குரூப் 'டி' வேலை க்கு உள்ளூர்காரங்களுக்கு புதுசா வேலை வாய்ப்பு தராமல், வெளி இடத்தில் இருந்து ஆட்களை வரவழைத்து இருக்காங்களாம்.
எப்படியும் அரசு வேலை வாய்ப்புகளில் இனி கோல்டு சிட்டியில் யூத் களுக்கு சான்சே இல்லையென முடிவெடுத்துட்டாங்களோ. இது பற்றி ஊரை காப்பாற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் உறக்கத்தில் இருக்காங்களே. இவங்கள எழுப்ப வேணுமானால் மக்கள் தரிசனத்து தேர்தல் தான் வரணும். அதுவரை அவங்க ரொம்போ பிசின்னு நெனச்சிக்க வேண்டியது தான் என்று பேசுவோரும் இருக்காங்க.
கோவில் நிலம் கோவிந்தா!
பழைய மாரிகுப்பத்தில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் பழமையான கோவில், குளம் இருக்குது. ஆனால், அவைகள் சில தனியார் ஆக்ரமிப்பில் இருப்பதாக சொல்றாங்க. இது பற்றி அறநிலையத்துறை ஆபீசர்கள், கோவில் நிலம் பற்றி சர்வே செய்ய வேணும்னு பல புகார்கள் பறந்திருக்குது.
உ.பேட்டை, ரா.பேட்டை, கணேஷ்புரம், கேசம் பள்ளி கோவில்களின் நிலம் விபரம் எல்லாம் கேட்டிருப்பதால் பலரின் வயிற்றில் புளியை கரைத்திருக்குதாம். எல்லாமே ஆபீசர்களின் உதவியில் தான் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதாம். அரசு என்ன நடவடிக்கை எடுக்க போறாங்களோ.