குடியும், கும்மாளமும்!
முன்பெல்லாம் ஒயின் ஷாப்புகளில் மது வகைகளை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி. ஆனால், அந்த விதிமுறைகள் எல்லாம் துாக்கி எறிந்து விட்டு இஷ்டம் போல கடைக்குள்ளேயே குடிக்க ஊத்தி கொடுக்கிறாங்க. குடி பிரியர்களுக்கு கொண்டாட்டமா போச்சு. குடியிருக்கும் பகுதியிலேயே அதிலும் கோவில், பள்ளிக்கூடம் இருக்கும் இடத்திலேயே மதுபானத்தை ஊத்தி கொடுத்து கும்மாளம் போட செய்திருக்காங்க.
இதனால், கலாசார சீரழிவு ஏற்படும்னு செல்டானா சதுக்கம் பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவைகளை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் மவுனமாக இருக்காங்க. அவர்களின் வாயை, கண்ணை மூடிக் கொள்ள, சேர வேண்டிய தொகைகள் அடக்கி விடுகிறதாம்.
தாமரையை பிளவு படுத்தும் கை!
கோலார் மாவட்டத்தில் தாமரைக் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த, ஹோட்டல் ஒன்றில் கூட்டம் ஒன்று சமீபத்தில் கூட்டினாங்க. இதில், செங்கோட்டை முனி.,க்கு எதிராக வசைபாடினாங்க. யார் யார் பங்கேற்றாங்க என்பது பலருக்கும் தெரிந்தும் போச்சு.
கோலாரில் மறுபடியும் அவருக்கு சீட் கொடுத்தால், தாமரைக்கு 'டெபாசிட்' கிடைக்காது. அதனாலே, ஆளை மாத்த வேணும்னு என்பதை அந்த கோஷ்டிக்காரங்க தெரிவிச்சிருக்காங்க. அசெம்பிளி தேர்தலில் கோலார் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் தாமரை ஜெயிக்காமல் போனதற்கு அவர் தான் காரணம். அவர், தனது செல்வாக்கை மட்டுமே வளர்த்துக் கொள்ள கவனம் காட்டுறாரே தவிர, தாமரையின் வெற்றிக்கு அவரின் பங்கு எதுவுமேயில்லை.
ஒவ்வொரு அசெம்பிளி தொகுதியிலும் கோஷ்டிகளை உருவாக்கி பிளவு ஏற்படுத்தியதையும் அவர்கள் ஞாபகப்படுத்தி மேலிட கவனத்திற்கு அனுப்பி வெச்சாங்க. இந்த அதிருப்தி கும்பல் கை கட்சியின் பின்னணியில் இயங்கி குழப்பம் செய்வதாக, செங்கோட்டை முனி மாநில தலைமையிடம் பதில் கொடுத்து இருக்காரு.
அதிருப்தி கோஷ்டியினரிடம் ஓட்டு வங்கி இருப்பதால், மேலிடமும், இதனை விட்டுத்தள்ளவில்லை. இருக்கும் தொகுதியை தக்க வைக்க விரைவில் குழு ஒன்றை அமைக்கப் போறாங்களாம். அதிருப்தி கோஷ்டியில் கோல்டு சிட்டி காரர்களும் இருக்காங்களாம்.
வாரிய பதவி எப்போ?
ப.பேட்டை அசெம்பிளிக்காரர் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். அமைச்சர் பதவி கிடைக்கும்னு காத்திருந்தவர். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அவருக்கு வாரிய பதவி வழங்குவதாகவும், எது என்பதையும் சொல்லிட்டாங்களாம். ஆனால், மாநில அமைச்சராக உள்ள தேசியத் தலைவரோட மகனின் தலையீட்டால் தடங்கலாகி நிற்கிறதாம்.
லோக் தேர்தலுக்கு முன் வாரியத் தலைவர் பதவி அறிவிக்க வேணும்னு சி.எம்., மற்றும் டி.சி.எம்., கட்சி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்தாலும், தடைபட்டு நிற்கிறதாம். கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரர் தனக்கு வாரியம் வேணாம்; மந்திரி பதவி தான் வேணும்; எப்போது கிடைக்குமோ அதுவரை காத்திருக்க போவதாக சொல்லிட்டாராம். ஆயினும், அவருக்கும் வாரியத் தலைவர் பதவி வழங்க லிஸ்ட்டில் பெயர் இருக்குதாம்.
பிப்ரவரி கடைசி வாரத்தில் வாரியத் தலைவர் பதவிக்கான லிஸ்ட் அறிவிக்கப் போறாங்க. பெரிய தேர்தலை சந்திக்க கை காரங்க தயாராகி வராங்க.

