பேராசை பெரு நஷ்டம்!
பெரிய பெரிய நகரங்களில் நடந்து வந்த ஆன் லைன் நிதி மோசடியில், இதுவரை கோல்டு சிட்டி பலியாகாமல் விழிப்பாக இருந்தது. ஆனால், ஆன் லைனில் சாட்டிங் செய்த நபர் ஒருவருக்கு, பேஸ்புக், வாட்ஸாப்பில் சாய் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் 1,000 ரூபாய் செலுத்தினால், ஒரே மாதத்தில் 2,000 ரூபாய் தரப்படும்ன்னு ஆசைக் காட்டி இருக்காங்க. அதை நம்பி பணத்தை செலுத்தினாராம். அவருக்கு அதிக பணம் கிடைத்ததாம். இது போல மற்றவர்களுக்கு தெரிவித்து, அவர்களும் பணம் செலுத்த, ஏஜென்டாக வேலை பார்த்திருக்காரு.
முன் பின் யோசிக்காமல் ரெட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு, 500 பேர் சேர்ந்திருக்காங்க. இவர்கள், 1,000 ரூபாய் முதல் 4,00,000 ரூபாய் வரை செலுத்தி இருக்காங்க. ஆன் லைன் வர்த்தகத்தில் சேர்ந்தவங்களோட 'கணக்கு'களை, திடீரென அந்த நிறுவனம் மூடிட்டாங்களாம்.
செலுத்திய பணத்தை திருப்பி கேட்ட போது, உங்களின் டிபாசிட் பணத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்துங்கள். மொத்த தொகையும் தருவோம்னு பதில் வந்ததாம்.
மீண்டும், அவர்களை தொடர்பு கொள்ள முடியலன்னு, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருக்காங்க. பாழுங் கிணற்றில் விழுந்திட்டோமேன்னு பணம் போன பிறகு வருத்தம் படுறாங்க. அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு மோசம் போகாதீங்கன்னு ஏமாந்தவங்க சொல்றாங்க.
உள்ளூருக்கு வேலை கிடைக்குமா?
இ.உணவகத்துக்கு இடத்தேர்வு முடிந்திருக்குது. ஆனால் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடலையாம்.
உள்ளுர் காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கல என்ற வருத்தம் இருக்குது. கட்டுமான பணியின் டெண்டராவது உள்ளுர் காரர்களுக்கு கிடைத்தால், இங்கு உள்ளோருக்கு வேலை கிடைக்கும்.
இதுவரை கட்டப் பட்ட பெரிய பெரிய கட்டடங்களில் 10 சதவீதம் பேர் கூட உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கலயாம்.
பெரும்பாலான ஆபிசர்கள் வெளியூர் காரர்களே. கூலித் தொழிலாளர்கள் கூட வெளியூர்காரர்களே. வேலைக்காக வெளியூர் சென்று திரும்பும் கூலித் தொழிலாளர்கள் அங்கலாய்க்கிறாங்க.
மோசமான சாலை
கோல்டு நகர் முழுதும் 100 கோடி ரூபாயில் சாலை அமைப்பவதாக பட்டியல் போட்டு சொன்னாங்க. அந்த சாலை முழுமை அடையுமா. அதுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேணுமோ.
ஆ.பேட்டை, உ.பேட்டை, ரா.பேட்டையின் பல சாலைகள் மோசமான நிலையில் இருப்பதை பொறுப்பானவங்க கண்டுக்கலயே. சாம்பியன் கல்லறை சாலையில் தினமும் ஆட்டோ சவாரிக்காரர்கள் அவதிப்படுறாங்க. இந்த சாலைக்கு உட்பட்டு மூன்று முனிசி., உறுப்பினர்கள் இருக்காங்க. அவங்களாவது கேட்கலாமே.

