சிக்குவாரா 'பிக் பாஸ்!'
மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை ஒன்றில், ஒன்றரை கோடி ரூபாய் திடீரென காணாமல் போகலையாம், நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே, கணக்கில் இடிப்பதாக சந்தேகம் எழுந்திருக்கு. எல்லாமே வங்கியின் 'பிக் பாஸ்' பார்த்துக் கொள்வார் என்று ஆபிசர்கள் அலட்சியமாக இருந்திருக்கின்றனர். இதை ஒருத்தரா விழுங்கலயாம்; விழுங்கியவர்களில் சில பெரிய ஆளுங்களும் இருக்காங்களாம்.
கிளை வங்கியின் பெரிய ஆபிசர், பாகே பள்ளியில் புதுசா அடுக்குமாடி கட்டடமும் கட்டி, கிரஹ பிரவேசமும் நடத்திட்டாராம்.
ஊழல் வெளியே தெரிந்து போச்சு. காக்கி நிலையத்திற்கு விரைவில் புகார் செய்யப் போறாங்களாம். இதில் சிக்கப் போறவங்க, இப்பவே ஜாமினுக்கு தயாராக போறாங்களாம்.
இந்த வங்கி ஊழல் பண விவகாரம் பலரின் துாக்கத்தை கெடுத்திருக்குது. சீனிவாசப்பூர் கைக் காரரை, அசம்பிளி தேர்தலில் தோற்கடிக்க, இந்த மாவட்ட வங்கியின் பணமும் ஒரு காரணம்னு தெரியுது.
பிளாக் கிரானைட்ஸ் ஊழல்!
ஆந்திர மாநிலத்திற்கு 3 கி.மீ., முன்கூட்டியே, கர்நாடகாவில் விவசாய விளைபொருள் சந்தையை, அரசின் நிலம் 25 ஏக்கரில் ஏற்படுத்துறாங்க. இதுக்காக 150 கோடி ரூபாய் செலவிட போறாங்களாம்.
சுற்றி காம்பவுண்ட் அமைக்க பூமி பூஜை செய்தாங்க. இந்நிகழ்ச்சியில் ஆபிசர்கள் யாருமே கலந்துக்கல. இந்த 25 ஏக்கரில் 2 ஏக்கர் பாறைகள் இருக்குது. அதிலும் 'பிளாக் கிரானைட்ஸ்'. ஏ.பி., மாநிலத்துக்காரங்க, கர்நாடக சுரங்கத்துறை அனுமதி பெறாமல், லோடு லோடாக வெட்டி எடுத்துச் செல்றாங்க.
இந்த கிரானைட் கற்களை வெட்டி எடுக்க, யார் அனுமதி கொடுத்தது; எப்போது ஏலம் விடப்பட்டது; இந்த கிரானைட்ஸ் கற்களின் மதிப்பீடு எவ்வளவு.
கோல்டு சிட்டியில் கிரானைட்ஸ் கொள்ளையில் பெரிய அரசியல்வாதிக்கு தொடர்பு இருப்பதாக புல்லுக்கட்டு, தாமரைக்காரர்கள் லோக் ஆயுக்தா எஸ்.பி., இடம் ஆதாரங்களுடன் புகார் செய்திருக்காங்க.
பெரிய தேர்தல் நேரத்தில் 'யார் அவர்' என்பது குறித்து விவாத மேடை இருக்கும். இதுபற்றி இப்பவே பேச துவங்கிட்டாங்க.
சுத்தமான குடிநீர் கிடைக்குமா?
ரா.பேட்டை முனிசி., பஸ் நிலையத்தில் பல கட்டடங்கள் வாடகைக்கு விடாமல் பூட்டி வெச்சிருக்காங்க இதனால் பல லட்சம் ரூபாய் வருமானம் வராமல் போகுது. இதன் மீது முனிசி., ஆபிசர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ யாருமே கவனிக்கல.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி பல ஆண்டுகள் கடந்து போனது. இதனையும் திறக்காமல் மூடியே வெச்சிருக்காங்க.
கோடை வெயில் 'பட்டை'யை கிளப்புது. மிக அவசியமாக குடிநீர் தேவை உள்ளது. இப்போதாவது பொறுப்பானவங்க கவனிக்க வேணுமே.

