தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தங்கவயல் அரசு அலுவலகங்கள் மூடல்
தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தங்கவயல் அரசு அலுவலகங்கள் மூடல்
ADDED : மார் 17, 2024 07:31 AM
லோக் சபா தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் நேற்று மாலை 3:00 மணிக்கு வெளியிடும் தகவல் நாடெங்கும் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியது. இத்தேர்தலை நடத்துகிற நபர்களே அரசு ஊழியர்கள் தான். இவர்களும் ஆர்வமாக இருந்தனர்.
நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பவன் குமார் இல்லை. கோலார் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்று விட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நகராட்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் 90 சதவீதம் பேர் இருக்கையில் இல்லை.
பரபரப்பாக இருக்கும் தங்கவயல் தாலுகா அலுவலகத்தில் மாலை 3:30 மணிக்கெல்லாம் 'வெறிச்' என காணப் பட்டது.
பெரும்பாலும் வெளியிடங்களில் இருந்து வேலைக்கு வருவோர், சனிக் கிழமை என்பதால் சீக்கிரமாக வெளியேறி விட்டனர். தாசில்தார் ராம லட்சுமையா உட்பட அதிகாரிகள், தேர்தல் பணி காரணமாக கோலார் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டனர். ஊழியர்கள் அலுவலக அறைகளை மூடிவிட்டு வெளியேறினர்.
பாரண்டஹள்ளியில் உள்ள தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்திலும் மாலை 4:00 மணிக்கெல்லாம் 'மெயின் கேட்' மூடப்பட்டிருந்தது. போலீசார் மட்டுமே சாலைகளில் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டனர்.
தேர்தல் நடத்தை நேற்று முதலே அமலுக்கு வந்தது. அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் படம் உள்ள அரசு விளம்பர பேனரும், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பிரதமர் நரேந்திர மோடி பேனரும் நேற்று இரவு வரை இருந்தன.
இன்று முதல் சின்னங்கள், பேனர்கள் அகற்றும் பணிகள் நடக்கலாம்.
தங்கவயலில் பிரசித்தி பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் பிரம்மோற்சவம் இம்மாதம் 19 ல் துவங்கி 31 ல் முடிவடைகிறது.
இத்தேர் திருவிழாவின் போது பக்தர்களை, அரசியல் தலைவர்கள் தங்களது படத்துடன் வரவேற்க பேனர்கள், கட் அவுட்கள் வைப்பது வழக்கம்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் இவைகளுக்கு தடை விழுந்துள்ளது. சுவாமி படங்கள் மட்டுமே திருவிழாவில் காண முடியும்.- நமது நிருபர் --

