16 மாதமாக நடக்காத தங்கவயல் நகராட்சி கூட்டம் பல கோடி ரூபாய் திட்ட பணிகள் 'வெயிட்டிங்'
16 மாதமாக நடக்காத தங்கவயல் நகராட்சி கூட்டம் பல கோடி ரூபாய் திட்ட பணிகள் 'வெயிட்டிங்'
ADDED : அக் 11, 2024 07:07 AM

தங்கவயல்: தங்கவயல் நகராட்சியில் 16 மாதங்களாக நகராட்சிக் கூட்டம் நடக்கவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தங்கவயல் நகராட்சி இரண்டாம் கட்ட தலைவராக, இந்திரா காந்தியும், துணைத் தலைவராக ஜெர்மன் ஜூலியட்டும் 2024 ஆகஸ்ட் 22ம் தேதி பொறுப்பேற்றனர். 45 நாட்களை கடந்தும், இதுவரை நகராட்சி கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை.
கலெக்டர் மெத்தனம்
இதற்கு முன்னதாக நகராட்சி நிர்வாகம், மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கியது. 2024ம் ஆண்டின் பட்ஜெட்டையும் அவரே தாக்கல் செய்தார். இதன் விபரங்கள், நகராட்சி கவுன்சிலர்கள் கவனத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது.
ஒவ்வொரு வார்டின் மேம்பாட்டு பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது; என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. நகராட்சியின் சொத்து வரி வருவாய், வாடகை வருமான விபரங்கள், நகராட்சிக்கு கிடைத்த மத்திய, மாநில அரசுகளின் நிதி விபரங்களை அறிய, நகராட்சி கவுன்சிலர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தங்கச்சுரங்கம், பெமல் தொழிற்சாலையின் சொத்து வரி நிலுவை தொகையில், 12 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மாநில அரசின் சிறுபான்மை நலத்திட்டத்தில் 4 கோடி ரூபாய் நிதியும் கிடைத்துள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், கவுன்சிலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தீர்மானம்
நகராட்சி பகுதிகளில் எல்.இ.டி., விளக்குகள், சாலை, கால்வாய் அமைத்தல், குடிநீர் பிரச்னை, வீட்டு மனைகள் வழங்கல், வீடுகள் கட்டித்தரும் திட்டம், சமுதாய பவன் கட்டுதல், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 18 சதவீத நிதி ஒதுக்குவதில் நல திட்டம், பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.
டெண்டர் விடாத வணிக வளாக கடைகள், புதிதாக திட்டமிடப்பட்டுள்ள அடுக்கு மாடி சந்தை கட்டடம், சுகாதார பிரச்னைகள், பெங்களூரு மாநகராட்சி பகுதி குப்பைகளை தங்கவயலில் கொண்டு வந்து கொட்டும் திட்டம், நீதிமன்ற விசாரணையில் உள்ள அம்பேத்கர் பவன் விவகாரம் போன்றவை நகராட்சியில் விவாதித்து தீர்மானிக்க வேண்டி உள்ளது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக கவுன்சில் கூட்டமே நடக்காமல் இருந்தது. இனி எப்போது நடக்கும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
படங்கள்: முனிசாமி, ஜெயபால், சக்திவேல், பிரவீன் குமார், ரமலம்மா, வேணி பாண்டியன், மாணிக்கம், ரமேஷ் ஜெயின், தங்கராஜ், கருணாகரன், டேவிட்
நகராட்சி கவுன்சிலர்கள் கருத்து
நிலைப்பாடு என்ன?
பெங்களூரு குப்பைகளை தங்கவயலில் கொட்டும், கர்நாடக அரசின் முடிவில், தங்கவயல் நகராட்சி நிலைப்பாடு என்ன. நான் தலைவராக இருந்த போது, அம்பேத்கர் பவன், அம்பேத்கர் சிலை அகற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கூட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முனிசாமி, காங்., பெமல் எம்பிளாயீஸ் குடியிருப்பு
விரைவில் கூட்டம்?
நிதிநிலை வளர்ச்சி பணிகள், குறைபாடுகள் குறித்தும் வார்டின் கவுன்சிலர் தான் தெரிவிக்க முடியும். பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விபரம் தெரியவில்லை. இதுகுறித்து விவாதிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புதிய தலைவர், துணைத்தலைவர் விரைவில் கூட்டம் நடத்த வேண்டும்.
- கருணாகரன், காங்., சொர்ணா நகர்
எல்.இ.டி., எங்கே?
தங்கவயல் நகராட்சி அனைத்து வார்டுகளிலும் எல்.இ.டி., மின் விளக்குகள் அமைத்துள்ளனர். என் வார்டில் இன்னும் அமைக்கவில்லை. இது பற்றி தெரிவிக்க வேண்டும். இன்னும் பல்வேறு பிரச்னைகள் பற்றி கருத்து தெரிவிக்க வாய்ப்பு வேண்டும்
-செந்தில்குமார், காங் ., மஸ்கம்
மாதந்திர கூட்டம்
இரண்டாம் கட்ட தலைவரும், துணைத் தலைவரும் கால தாமதமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு வழியாக தேர்தல் நடத்தி, தேர்ந்தெடுத்தனர். ஆனால், கவுன்சில் கூட்டம் நடத்தவில்லையே. இனியாவது மாதாந்திர கூட்டத்தை தவறாமல் நடத்துவர் என தெரிகிறது.
-சக்திவேல், சுயே., மஜித்
கலெக்டர் செய்தது என்ன?
தண்ணீர் பிரச்னை, பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல், கொசுக்கள் தொல்லை என பல பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டும். மாவட்ட கலெக்டர் பொறுப்பில், நகராட்சி ஓராண்டுக்கு மேல் இருந்தது. அவர், ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை.
- தங்கராஜ், மார்க்., கம்யூ., எட்கர்ஸ்
என்னாச்சு பவன்?
நடப்பு 15வது நிதி திட்டத்தில், 1.25 கோடி ரூபாயில், குறிப்பிட்ட ஒரு வார்டில் மட்டுமே சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பால்கார் வார்டில் சமுதாய பவன் கட்ட நிதி ஒதுக்கவில்லை. நகராட்சி கூட்டம் நடந்தால் தானே, இது பற்றி கேட்க முடியும்.
-ரமலம்மா, பா.ஜ., பால்கார்
வந்த நிதி எங்கே?
தங்கவயல் தொகுதிக்கு சிறுபான்மையினர் நல திட்ட நிதி, 4 கோடி ரூபாய் வந்துள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 20 லட்சம் ரூபாய் நிதியில் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேறென்ன நிதி, மேற்கொள்ளப்பட்ட, திட்டமிட்ட விபரங்களை அறிய வேண்டாமா.
ஜெயபால், காங்., புல்லன்ஸ்
எம்.எல்.ஏ., ஆலோசனை
தலைவர், துணைத் தலைவர் ஆகியோர், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் ஆலோசனை பெற்று நகராட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற கவுன்சில் தீர்மானம் முக்கியம்.
-மாணிக்கம், காங்., பெமல் ஆபீசர்ஸ் குவார்ட்டர்ஸ்
ஏக்கம்
நகராட்சியில் நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநில அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க நடவடிக்கை தேவை.
டேவிட், நியமன உறுப்பினர்.
யாரும் கண்டுக்கலை
குறிப்பிட்ட ஒரு சில வார்டுகள் மீது தான் கவனம் செலுத்துகின்றனர். சிறுபான்மையினர் வார்டுகளுக்கு தாராளம். நாங்கள் பா.ஜ., என்பதால், புறக்கணிக்கின்றனர். வார்டு பிரச்னைகள் பற்றி யாரிடம் தெரிவிக்க வேண்டும். ஒருவரும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
-வேணி பாண்டியன், பா.ஜ., டாங்க்
'நோ கமென்ட்ஸ்'
நகராட்சி கூட்டம் இம்மாதம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. கூட்டம் நடக்கும் போது பிரச்னைகள் குறித்து பேசலாம். அதற்கு மேல் 'நோ கமென்ட்ஸ்'
-ரமேஷ் ஜெயின், காங்., ஜெயின்
எதிர்பார்ப்பு
நகராட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பது நகரில் வாழும் அனைவரின் எதிர்ப்பார்ப்பு. அனைவரின் தேவைகளை, கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கலாம். எனவே, விரைவாக கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
- பிரவீன் குமார், சுயேச்சை, கிங் ஜார்ஜ்